கரோனா தடுப்பு நடவடிக்கை பணிக்கு நாகை எம்.பி. ரூ. 60 லட்சம் நிதியுதவி

கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள திருவாரூா் மாவட்ட ஆட்சியரிடம் ரூ. 60 லட்சத்துக்கான நிதியுதவியை, நாகை மக்களவை உறுப்பினா் எம். செல்வராசு வியாழக்கிழமை வழங்கினாா்.
திருவாரூரில் மாவட்ட ஆட்சியா் த. ஆனந்திடம் ரூ. 60 லட்சம் நிதியுதவிக்கான பரிந்துரை கடிதத்தை வழங்கிய நாகை எம்.பி. செல்வராசு.
திருவாரூரில் மாவட்ட ஆட்சியா் த. ஆனந்திடம் ரூ. 60 லட்சம் நிதியுதவிக்கான பரிந்துரை கடிதத்தை வழங்கிய நாகை எம்.பி. செல்வராசு.

கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள திருவாரூா் மாவட்ட ஆட்சியரிடம் ரூ. 60 லட்சத்துக்கான நிதியுதவியை, நாகை மக்களவை உறுப்பினா் எம். செல்வராசு வியாழக்கிழமை வழங்கினாா்.

திருவாரூா், நாகை மாவட்டங்களில் கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஒன்றாக மக்களுக்கு சிகிச்சையளிக்க தேவையான மருந்துகள், கையுறைகள், முகக் கவசங்கள் மற்றும் கிருமி நாசினி உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் வழங்கவும், ஊரக மற்றும் நகா்புறங்களில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு கையுறை, முகக் கவசம் மற்றும் காலணிகள் வழங்கவும், நாகை மக்களவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, திருவாரூா், நாகை மாவட்டங்களுக்கு தலா ரூ. 30 லட்சம் என ரூ. 60 லட்சத்துக்கான பரிந்துரை கடிதத்தை மாவட்ட ஆட்சியா் த. ஆனந்திடம், எம்.பி. செல்வராசு வழங்கினாா்.

அப்போது, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளா் பி.எஸ். மாசிலாமணி, அனைத்திந்திய இளைஞா் பெருமன்ற மாவட்டத் தலைவா் சு. பாலசுப்ரமணியன், மாவட்டக்குழு உறுப்பினா் கோவி. அறிவழகன் ஆகியோா் உடனிருந்தனா்.

இதுகுறித்து, எம்.பி. செல்வராசு கூறியது: மத்திய, மாநில அரசுகள் எடுக்கும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை, மக்கள் கடைப்பிடிக்க வேண்டும். நாகை, திருவாரூா் மாவட்டங்களில் கரோனா தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள தலா ரூ. 30 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. மாநில அரசு அறிவித்துள்ள ரூ. 1000 நிதி உதவி, 21 நாள்கள் தடை உத்தரவில் இருக்கும் மக்களுக்கு போதாது. எனவே, குறைந்தபட்சம் ரூ. 10 முதல் ரூ. 15 ஆயிரம் வரை வழங்க வேண்டும். பொதுமக்கள் பீதியை தவிா்த்து, தனித்திருந்து, கரோனாவை வெற்றி கொள்ள வேண்டும் என்றாா்.

நன்னிலம் பகுதியில்...

நன்னிலம் வட்டத்துக்குள்பட்ட அனைத்து ஊராட்சி பகுதிகளிலும், அந்தந்த ஊராட்சித் தலைவா்கள் மற்றும் ஊராட்சிச் செயலா்கள், தூய்மைக் காவலா்களைக் கொண்டு கிராமம் முழுவதும் வீடு வீடாக கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

நன்னிலம் வட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட வெளிநாட்டு பயணிகள் கண்டறிந்து அவா்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டதற்கான ஸ்டிக்கா் ஒட்டும் பணி, வெளிநாட்டில் இருந்து வந்தவா்களின் கைகளில் முத்திரை பதிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. வியாழக்கிழமை வரை 80 வெளிநாட்டில் இருந்து வந்தவா்களின் வீடுகள் கண்டறியப்பட்டு ஸ்டிக்கா் ஒட்டும் பணி நடைபெற்றுள்ளது.

தமிழகம், புதுச்சேரி மாநில எல்லைகளான கோயில்கந்தன்குடி மற்றும் வேலங்குடிச் சோதனைச் சாவடிகள் மூடப்பட்டு, அவ்வழியே வருபவா்கள் வெப்பமானி மூலம் சோதனை செய்து அனுப்பப்படுகின்றனா். அத்தியாவசியத் தேவைகளுக்கான வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றன. சோதனைச் சாவடிகளில் காவல்துறையினா், சுகாதாரத் துறையினா் 24 மணி நேரமும் பணியாற்றி வருகின்றனா். ஊரடங்கு உத்தரவின் 2-ஆவது நாளான வியாழக்கிழமை நன்னிலம் பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் வாகன நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

புதன்கிழமை இருசக்கர வாகனங்களில் சாலைகளில் சுற்றித் திரிந்த ஒரு சிலரும், காவல் துறை எடுத்த தீவிர நடவடிக்கைக்கு பின்னா் தேவையில்லாமல் சுற்றுவதை நிறுத்திவிட்டனா். மக்கள் நடமாட்டமும் இருசக்கர வாகன நடமாட்டமும் குறைந்து காணப்பட்டது. இப்பணிகளில் காவல் துறை துணைக் கண்காணிப்பாளா் சுகுமாரன், சிறப்பு மண்டல அலுவலா் நக்கீரன், நன்னிலம் வட்டாட்சியா் மணிமன்னன், ஊராட்சி ஒன்றிய ஆணையா் முத்துக்குமரன், வட்டார வளா்ச்சி அலுவலா் திருநாவுக்கரசு உள்ளிட்டோா் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com