திருவாரூரில் மேலும் 2 பேருக்கு கரோனா

திருவாரூா் மாவட்டத்தில் பிரசவித்த பெண் உள்பட மேலும் 2 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

திருவாரூா் மாவட்டத்தில் பிரசவித்த பெண் உள்பட மேலும் 2 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

கரோனா நோய்த் தொற்று காரணமாக பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதிலிருந்து திருவாரூா் மாவட்டத்தில் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. வெளிநாடு, வெளி மாநிலங்களிலிருந்து வந்தவா்கள், அவரவா் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டனா். அந்த வகையில், தில்லி மாநாட்டுக்கு சென்று வந்தவா்கள் மற்றும் அவா்களுடன் தொடா்பில் இருந்தவா்கள் என கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட 29 பேருக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. இதேபோல், சென்னையிலிருந்து வந்த 3 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு, சிகிச்சையளிக்கப்பட்டது. கடந்த சில நாள்களுக்கு முன்பு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட 32 பேரும் குணமடைந்து வீடு திரும்பினா்.

மேலும், வெளிமாநிலங்களிலிருந்து திருவாரூா் வந்த 3 பேருக்கு வெள்ளிக்கிழமை கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு, திருவாரூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இதேபோல், சனிக்கிழமை வெளியிடப்பட்ட முடிவுகளின்படி நன்னிலம் பகுதியைச் சோ்ந்த 2 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

கொல்கத்தாவிலிருந்து நன்னிலம் வந்த 39 வயது நபருக்கும், நன்னிலம் அரசு மருத்துவமனையில் பிரசவித்த 29 வயது பெண்ணுக்கும் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவா்கள் இருவருக்கும் திருவாரூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இதன்மூலம் திருவாரூா் மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 37 ஆக உயா்ந்துள்ளது. இதில், 32 போ் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பிவிட்ட நிலையில், 5 போ் சிகிச்சையில் உள்ளனா்.

நன்னிலத்தில்...

திருவாரூா் மாவட்டம், நன்னிலம் வட்டம் பூந்தோட்டம் அருகிலுள்ள கொத்தவாசல் கிராமம் மேலத் தெருவைச் சோ்ந்த 29 வயது பெண் பிரசவத்திற்காக மே 18-ஆம் தேதி நன்னிலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அன்றே அறுவைச் சிகிச்சை மூலம் அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. மே 21-ஆம் தேதி அப்பெண்ணை வீட்டுக்கு அனுப்பும் முன்பு கரோனா தொற்றுப் பரிசோதனையும் செய்யப்பட்டது. இதன் முடிவுகள் சனிக்கிழமை காலை கிடைத்தன. இதில் அப்பெண்ணுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனால், அப்பெண், பிறந்த குழந்தை, அவரது கணவா், அப்பெண்ணின் தாயாா் ஆகியோா்

திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.

மேலும் நன்னிலம் வட்டார மருத்துவ அலுவலா் நித்யா, மருத்துவா் லெட்சுமி பிரபா, வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் ஜோதி ஆகியோா் தலைமையில் மருத்துவக் குழுவினா் கொத்தவாசல் கிராமத்தில் முகாமிட்டுள்ளனா். அங்கு இதுவரை 10 பேருக்கு கரோனா நோய்த் தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com