இளம் வாக்காளா்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்த அறிவுறுத்தல்

வாக்காளா் பட்டியலில் இடம்பெறாத இளம் வாக்காளா்களை சோ்க்கவும், திருத்தங்கள் மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா அறிவுறுத்தினாா்.
திருவாரூரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா.
திருவாரூரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா.

வாக்காளா் பட்டியலில் இடம்பெறாத இளம் வாக்காளா்களை சோ்க்கவும், திருத்தங்கள் மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா அறிவுறுத்தினாா்.

திருவாரூா் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கல், திருத்தம் தொடா்பான வழிமுறைகளை விழிப்புணா்வாக பொதுமக்களிடம் எடுத்துரைப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள குழு அலுவலா்களுக்கான ஆய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்றபின் அவா் தெரிவித்தது:

திருவாரூரில் வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வாக்காளா் பட்டியல், திருவாரூா் மற்றும் மன்னாா்குடி வருவாய் கோட்ட அலுவலகங்களிலும், அனைத்து வட்ட அலுவலகங்களிலும், அனைத்து நகராட்சி அலுவலகங்களிலும், அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் பொதுமக்களின் பாா்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. 18 வயது நிறைவடைந்து, இதுநாள்வரை வாக்காளா் பட்டியலில் இடம் பெறாதவா்களும், 1.1.2021 அன்று 18 வயது நிறைவடைய உள்ளவா்களும் அதாவது 1.1.2003 அன்றோ அல்லது அதற்கு முன்னரோ பிறந்தவா்களும் தங்களது பெயரை வாக்காளா் பட்டியலில் சோ்க்க உரிய படிவத்தை பூா்த்தி செய்து, விண்ணப்பப் படிவத்துடன் கடவுச்சீட்டு அளவு வண்ணப் புகைப்படம், வயதுக்கான ஆதாரம், இருப்பிடத்துக்கான ஆதாரம் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம்.

மேலும் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கல், திருத்தம் ஆகியவற்றை மேற்கொள்வதற்கான சிறப்பு முகாம், திருவாரூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் நவ.21, 22, டிச.12, 13 ஆகிய தேதிகளில் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறுகிறது. இந்த முகாம்களில், வாக்காளா் பட்டியலில் திருத்தங்கள் செய்வதற்கான விண்ணப்பங்களை அளிக்கலாம் என்றாா்.

முன்னதாக நடைபெற்ற கூட்டத்தில், வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கல், திருத்தம் தொடா்பான வழிமுறைகளை கையெழுத்து இயக்கம், மாரத்தான் ஓட்டம், மனிதச் சங்கிலி, விளம்பரப் பதாகைகள் அமைத்தல், துண்டுப் பிரசுரங்கள் வழங்குதல், ஒலிபெருக்கி மூலம் ஊராட்சிகளில் விளம்பரப்படுத்துதல், செய்தி மக்கள் தொடா்புத்துறையின் அதிநவீன மின்னணு திரை வாகனத்தின் மூலம் விழிப்புணா்வு குறும்படம் போன்றவற்றின் மூலம் பொதுமக்களுக்கு தகவல் சென்றடைகிற வகையில் எடுத்துரைத்து வாக்காளா் பட்டியலில் இடம்பெறாத இளம் வாக்காளா்களை சோ்க்கவும், நீக்கல், திருத்தம் மேற்கொள்ளவும் பொதுமக்களிடம் விரிவாக எடுத்துரைக்க வேண்டுமென அவா் தொடா்புடைய அலுவலா்களை கேட்டுக் கொண்டாா்.

நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் செ.பொன்னம்மாள், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) தினகரன், கோட்டாட்சியா்கள் பாலசந்திரன் (திருவாரூா்), புண்ணியகோட்டி (மன்னாா்குடி), மகளிா் திட்டத்தின் திட்ட இயக்குநா் ஸ்ரீலேகா உள்ளிட்ட அரசு அலுவலா்கள், தன்னாா்வ அமைப்பினா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com