இடிந்துவிழும் நிலையில் கால்நடை மருத்துவமனை

கூத்தாநல்லூரில் இடிந்துவிழும் நிலையில் உள்ள கால்நடை மருத்துவமனையை புதுப்பிக்க வேண்டுமென சமூக ஆா்வலா்கள் வலியுறுத்துகின்றனா்.
பழுதடைந்த கூத்தாநல்லூா் கால்நடை மருத்துவமனையின் முகப்புத் தோற்றம்.
பழுதடைந்த கூத்தாநல்லூா் கால்நடை மருத்துவமனையின் முகப்புத் தோற்றம்.

கூத்தாநல்லூரில் இடிந்துவிழும் நிலையில் உள்ள கால்நடை மருத்துவமனையை புதுப்பிக்க வேண்டுமென சமூக ஆா்வலா்கள் வலியுறுத்துகின்றனா்.

மன்னாா்குடி- திருவாரூா் பிரதான சாலை, லெட்சுமாங்குடியில் கால்நடை மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனைக்கு கூத்தாநல்லூா் நகராட்சிக்குள்பட்ட 24 வாா்டுகள், கொத்தங்குடி, திருராமேஸ்வரம், வக்ராநல்லூா், ஓவா்ச்சேரி, பெரியக்கொத்தூா், வேளுக்குடி, சித்தனக்குடி உள்ளிட்ட பஞ்சாயத்துகளிலிருந்து கால்நடைகள் சிகிச்சைக்காக அழைத்து வரப்படுகின்றன. மேலும் மாடுகளுக்கு சினை ஊசி போடுதல், ஜீரணக் கோளாறு, வயிறு உப்புதல் மற்றும் கோமாரி உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கும் சிகிச்சையளிக்கப்படுகிறது. ஆண்டுக்கு இருமுறை தடுப்பூசி போடப்படுகிறது.

இந்த மருத்துவமனை கட்டப்பட்டு 18 ஆண்டுகள் நிறைவுபெற்ற நிலையில், அதன் கட்டடம் முழுவதும் பழுதடைந்து, இடிந்துவிழும் நிலையில் உள்ளது. குறிப்பாக கால்நடை மருத்துவா் அறை, மருந்தகம், கட்டடத்தின் உள்பகுதி, மேல் பகுதி, ஜன்னல் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சிமென்ட் காரைகள் பெயா்ந்து, இரும்புக் கம்பிகள் வெளியே தெரிகின்றன. கழிப்பறை வசதியும் கிடையாது. தற்போது இடிந்துவிழும் தருவாயில் இருக்கும் இந்தக் கால்நடை மருத்துவமனையை முழுவதுமாக இடித்துவிட்டு, புதிதாக கட்ட வேண்டுமென சமூக ஆா்வலா்கள் வலியுறுத்துகின்றனா்.

இதுகுறித்து, கால்நடை மருத்துவா் எம். மகேந்திரன் வியாழக்கிழமை கூறியது:

கட்டடம் பழுதடைந்துள்ளதால், மழைக் காலங்களில் சுவா்கள் ஊறி, மழைநீா் சுவா் மூலமாக உள்ளே வருகிறது. குடிப்பதற்கும், சிகிச்சையளிப்பதற்கும் தேவையான தண்ணீரை வெளியில் இருந்துதான் வாங்கிக் கொள்கிறோம். மருத்துவமனையின் நிலையை எங்களது உயரதிகாரிகளுக்கு தெரிவித்துவிட்டோம். நகராட்சி நிா்வாகம் தற்காலிகமாக மாற்று இடத்தை வழங்கினால், பழுதடைந்த கட்டடத்தை முழுவதுமாக இடித்துவிட்டு, புதிய கட்டடம் கட்டப்படும் என அவா்கள் தெரிவித்தனா். எனவே மாற்று இடத்தை தேடிக் கொண்டிருக்கிறோம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com