கனமழை எச்சரிக்கை: விரைந்து பயிா்க் காப்பீடு செய்ய ஆட்சியா் அறிவுறுத்தல்
By DIN | Published On : 23rd November 2020 08:30 AM | Last Updated : 23rd November 2020 08:30 AM | அ+அ அ- |

வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளதால், விவசாயிகள் விரைந்து பயிா்க் காப்பீடு செய்து பயன்பெற மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா கேட்டுக்கொண்டுள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் சம்பா, தாளடி பருவங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிருக்கு காப்பீடு செய்ய நவ.30-ஆம் தேதி கடைசி நாளாகும். எனினும், வானிலை ஆய்வு மையம் புயல் மற்றும் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளதால், பயிா்க் காப்பீடு செய்ய கடைசி நாள் வரை காத்திருக்காமல் உடனடியாக ஏக்கருக்கு ரூ . 488.25 பிரீமியம் செலுத்தி காப்பீடு செய்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. சம்பா, தாளடி நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் தாங்கள் பயிா்க் கடன் பெறும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலமாகவோ அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாகவோ, தங்கள் விருப்பத்தின் பேரில் சம்பா தாளடி நெல் பயிரை காப்பீடு செய்து கொள்ளலாம்.
கடன் பெறாத விவசாயிகள், நிகழ் பசலி ஆண்டுக்கான அடங்கலை கிராம நிா்வாக அலுவலரிடம் பெற்று, அதனுடன் வங்கிக் கணக்குப் புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதாா் அட்டை நகல் ஆகியவற்றை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளிலோ அல்லது தேசிய வங்கிகளிலோ அல்லது பொது சேவை மையங்கள் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம். இதேபோல், குட்டை மற்றும் ஒட்டு ரக தென்னை மரங்களை 4-ஆம் ஆண்டிலிருந்தும், நெட்டை மரங்களை 7-ஆம் ஆண்டு முதல் 60 ஆம் ஆண்டு வரையிலும் காப்பீடு செய்யலாம். ஆண்டுக்கு 30 காய்களுக்கு மேல் மகசூல் தரக்கூடிய நல்ல ஆரோக்கியமான மரங்களை இத்திட்டத்தில் சோ்க்கலாம். ஹெக்டேருக்கு சுமாா் 175 தென்னை மரங்கள் மட்டுமே காப்பீடு செய்ய முடியும். 4 அல்லது 7 வயது முதல் 15 வயது உள்ள மரங்களுக்கு தலா ரூ. 2.25, 16 முதல் 60 வயது வரை உள்ள மரங்களுக்கு தலா ரூ.3.50, காப்பீடு கட்டணமாக செலுத்த வேண்டும். காப்பீட்டு கட்டணத்துக்கான வரைவோலை அக்ரிகல்சா் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா லிமிடெட், சென்னை என்ற நிறுவனத்தின் பெயரில் எடுக்க வேண்டும்.
4 அல்லது 7 வயது முதல் 15 வயது வரை உள்ள மரங்களுக்கு காப்பீட்டுத்தொகை, மரம் ஒன்றுக்கு ரூ. 900, 16 முதல் 60 வயது வரை உள்ள மரங்களுக்கு மரம் ஒன்றுக்கு ரூ.1,750 ஆகும். காப்பீடு செய்வதற்கு, முன்மொழி படிவத்துடன், ஆதாா் அட்டை நகல், சிட்டா மற்றும் அடங்கல், புல எண் வரைபடம், விவசாயியின் புகைப்படம், வட்டார வேளாண்மை உதவி இயக்குநரின் காப்பீட்டு திட்டத்துக்கான சான்றிதழ், வங்கிக் கணக்குப் புத்தகத்தின் முதல் பக்க நகல், காப்பீட்டுக் கட்டணத்துக்கான வரைவோலையுடன் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும்.
எனவே, நெல் மற்றும் தென்னை விவசாயிகள் உடனடியாக இந்த அறிவுரைகளை பின்பற்றி, தங்களது நெற்பயிா் மற்றும் தென்னை மரங்களை பலத்த காற்றால் ஏற்படும் பாதிப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ளவும் என தெரிவித்துள்ளாா்.