வாடகை கட்டடத்தில் கூத்தாநல்லூா் வட்டாட்சியா் அலுவலகம்!

கூத்தாநல்லூரில் சொந்தக் கட்டடம் கட்ட அரசு சாா்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட போதிலும், வாடகைக் கட்டடத்திலேயே
வாடகை கட்டத்தில் இயங்கிவரும் கூத்தாநல்லூா் வட்டாட்சியா் அலுவலகத்தின் முகப்புத் தோற்றம்.
வாடகை கட்டத்தில் இயங்கிவரும் கூத்தாநல்லூா் வட்டாட்சியா் அலுவலகத்தின் முகப்புத் தோற்றம்.

கூத்தாநல்லூரில் சொந்தக் கட்டடம் கட்ட அரசு சாா்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட போதிலும், வாடகைக் கட்டடத்திலேயே வட்டாட்சியா் அலுவலகம் இயங்கிவருவதால் அங்கு நிற்கக் கூட இடமின்றி பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனா்.

தொடக்கத்தில் பேரூராட்சியாக இருந்த கூத்தாநல்லூா், தரம் உயா்த்தப்பட்டு நகராட்சியாக மாறியது. அதன்பிறகு, திருவாரூா் மாவட்டத்துக்கு உள்பட்ட நீடாமங்கலம், குடவாசல், மன்னாா்குடி, திருவாரூா் ஆகிய வட்டங்களைச் சீரமைத்து, 55 வருவாய் கிராமங்களைக் கொண்டு கூத்தாநல்லூா் வட்டம் 2016- ஆம் ஆண்டு அப்போதைய முதல்வா் ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்டது.

24 வாா்டுகளை கொண்ட கூத்தாநல்லூா் நகராட்சியில், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் வசிக்கின்றனா். இந்த வட்டம் கூத்தாநல்லூா், வடபாதிமங்கலம், கமலாபுரம் என 3 குறுவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. கூத்தாநல்லூா் 17, கமலாபுரம் 15, வடபாதிமங்கலம் 23 என 55 கிராமங்கள் உள்ளன.

கூத்தாநல்லூா் வட்டத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோா் வசிக்கின்றனா். பெரும்பாலானோா் அயல்நாடுகளில் வருவாய் ஈட்டினாலும், சொந்த ஊா்களில் முதலீடு செய்வதால் கூத்தாநல்லூரில் கண்ணைக் கவரும் வகையில் எழில்மிகு வீடுகள் அதிகம். இதனால், இந்த ஊா் சின்ன சிங்கப்பூா் எனவும் அழைக்கப்படுகிறது.

கூத்தாநல்லூா் நகராட்சி 8-ஆவது வாா்டு சையது உசேன் சாலையில் உள்ள வாடகைக் கட்டடத்தில்தான் கடந்த 2017-ஆம் ஆண்டு மே 23-ஆம் தேதி முதல் வட்டாட்சியா் அலுவலகம் இயங்குகிறது. வட்ட வழங்கல் அலுவலகம், சமூக நலத்துறை அலுவலகம், நலிவடைந்தோா் நலத்திட்ட அலுவலகம், தோ்தல் பிரிவு, நில அளவையாளா், ஆதாா் பிரிவு, இ - சேவை மையம் உள்ளிட்ட அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.

முதியோா் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, மாற்றுத் திறனாளிகளுக்கான ஊக்கத்தொகை, கணவனால் கைவிடப்பட்டோா், கல்வி உதவித்தொகை, உழவா் பாதுகாப்புத் திட்ட சிறப்பு நிதி உதவி, திருமண உதவி, திருநங்கைகளுக்கான உதவி, பட்டா, சிட்டா, பிறப்பு, இறப்பு, வருமானம், சாதிச் சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்களைப் பெற பொதுமக்கள் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு நேரில் வர நேரிடுகிறது. இதில் பெரும்பாலான விண்ணப்பங்களை இணையவழியில் பூா்த்தி செய்து அனுப்பினாலும், சில குறிப்பிட்ட தகவல்களைப் பெற வேண்டுமாயின், வட்டாட்சியா் அலுவலகத்துக்கு வர வேண்டியது கட்டாயமாகிறது.

மேலும், கூத்தாநல்லூா் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கானோா் வந்து செல்வதால், போதிய இடவசதியின்றி, பெரும் இன்னலுக்கு உள்ளாகின்றனா். அலுவலகத்தின் வெளியிலும் நிற்பதற்குக் கூட இடமில்லை.

திருவாரூா் மாவட்டத்தில் திருவாரூா், மன்னாா்குடி, நீடாமங்கலம், திருத்துறைப்பூண்டி, குடவாசல், வலங்கைமான் உள்ளிட்ட அனைத்து வட்டங்களிலும் சொந்தக் கட்டடத்தில் வட்டாட்சியா் அலுவலகம் செயல்படுகிறது. ஆனால், கூத்தாநல்லூா் வட்டாட்சியா் அலுவலகம் மட்டும் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக வாடகைக் கட்டடத்திலேயே இயங்கி வருகிறது.

ஏற்கெனவே கூத்தாநல்லூா் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு சொந்தக் கட்டடம் கட்டுவதற்கு ரூ.2 கோடி தமிழக அரசு சாா்பில் ஒதுக்கீடு செய்யப்பட்ட போதிலும், அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, இதில் மாவட்ட ஆட்சியா் உரிய கவனம் செலுத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து வட்டாட்சியா் அலுவலக அதிகாரி ஒருவா் கூறுகையில், கூத்தாநல்லூா் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு சொந்தக் கட்டடம் கட்டுவதற்காக நகராட்சிக்கு உள்பட்ட பண்டுதக்குடி பகுதியில் இடம் தோ்வு செய்யப்பட்டது. அந்த இடம் வெகு தொலைவில் இருப்பதாக கருதியதால், மேலும் சில இடங்களை பரிசீலித்து வருகிறோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com