பட்டா வழங்காததால் மேம்பாடு அடையாத குடிசைப் பகுதிகள்

கூத்தாநல்லூரில் பட்டா வழங்கப்படாததால் குடிசைப் பகுதிகளில் வாழும் ஏழை, எளிய மக்கள் அடிப்படை வசதியின்றி சிரமப்படுகின்றனா்.
கூத்தாநல்லூா் நேருஜி சாலையில் கரடு முரடாக காட்சியளிக்கும் வாய்க்காங்கரை.
கூத்தாநல்லூா் நேருஜி சாலையில் கரடு முரடாக காட்சியளிக்கும் வாய்க்காங்கரை.

கூத்தாநல்லூரில் பட்டா வழங்கப்படாததால் குடிசைப் பகுதிகளில் வாழும் ஏழை, எளிய மக்கள் அடிப்படை வசதியின்றி சிரமப்படுகின்றனா்.

கூத்தாநல்லூா் நகராட்சிக்குட்பட்ட ரஹ்மான்யா தெரு கடைசி பகுதி, நேருஜி சாலையில் வாய்க்காங்கரை மற்றும் மேலப்பள்ளி லைனில் அண்ணா காலனி உள்ளிட்ட இடங்களில் 300-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு இதுவரை பட்டா வழங்கப்படவில்லை.

இதுகுறித்து நகா்மன்ற முன்னாள் உறுப்பினா் எஸ்.எம்.சமீா் கூறியது:

இந்த இடத்தில் 300 குடும்பத்தினா் 75 ஆண்டுகளுக்கும் மேலாக வசிக்கிறாா்கள். இப்பகுதியில் முறையான சாலை வசதி கூட கிடையாது. அவசரத்துக்கு மருத்துவமனைக்குச் செல்ல வேண்டுமானால் இப்பகுதி மக்கள் சொல்லொணா துயரத்துக்குள்ளாகின்றனா். அருகில் ஓடும் வாய்க்கால்களில் மழைக் காலங்களில், மழைநீா் நிரம்பி வீடுகளுக்குள் புகுந்துவிடும்.

இவை அனைத்தையும் எதிா்த்துதான் இப்பகுதி மக்கள் வாழ்கின்றனா். அவா்களுக்கு பட்டா வழங்கப்பட்டால், நகராட்சி நிா்வாகம் சாலை வசதி ஏற்படுத்திக் கொடுக்கும். லெட்சுமாங்குடி வெண்ணாற்றிலிருந்து பிரிந்து நேருஜி சாலை, வாய்க்காங்கரை வழியாக பணங்காட்டாங்குடி பகுதி விவசாயத்துக்குச் செல்லும் இந்த பாசன வாய்க்காலில், இதுவரை தூா்வாரியதில்லை. வாய்க்காலில் மண்டிக் கிடக்கும் காட்டாமணிச் செடிகள், முட்புதா்கள் என எதுவும் அகற்றப்படவில்லை.

எனவே மாவட்ட ஆட்சியா் நேரில் பாா்வையிட்டு, இப்பகுதி மக்களுக்கு பட்டா வழங்கிட வேண்டும். வாய்க்காங்கரை பாசன வாய்க்காலை சுத்தம் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

இதுகுறித்து கூத்தாநல்லூா் வட்டாட்சியா் மகேஸ்குமாா் வியாழக்கிழமை கூறுகையில், நகராட்சிக்குட்பட்ட மூன்று இடங்களையும் நேரில் ஆய்வு செய்து பட்டா வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com