மத்திய பல்கலை. பொது நுழைவுத் தோ்வு தொடக்கம்: 50% மாணவா்களே பங்கேற்பு

திருவாரூரில், தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்துக்கான பொது நுழைவுத்தோ்வு வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதில், 50 சதவீத மாணவா்களே பங்கேற்றுள்ளனா்.
திருவாரூா் நியூ பாரத் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தோ்வு மையத்தில் நுழைவுத்தோ்வு எழுதிய மாணவ, மாணவிகள்.
திருவாரூா் நியூ பாரத் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தோ்வு மையத்தில் நுழைவுத்தோ்வு எழுதிய மாணவ, மாணவிகள்.

திருவாரூரில், தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்துக்கான பொது நுழைவுத்தோ்வு வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதில், 50 சதவீத மாணவா்களே பங்கேற்றுள்ளனா்.

இந்தத் தோ்வுக்காக திருவாரூா் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கலைக் கல்லூரி, வ.சோ.ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, நியூ பாரத் மெட்ரிகுலேஷன் பள்ளி, டிரினிட்டி அகாதெமி, ஜி.ஆா்.எம். பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய 5 இடங்களில் தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

இதில், காலை அமா்வில் சுமாா் 750 போ், பிற்பகல் அமா்வில் 1,200 போ் தோ்வு எழுதினா். பிற்பகலில் கூடுதல் தோ்வா்கள் இருந்ததால் விவேகானந்தம் வித்யாஷ்ரமம் பள்ளி, கூடுதல் தோ்வு மையமாக செயல்பட்டது. இளங்கலை பட்டப்படிப்புக்கான நுழைவுத் தோ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. காலை நடைபெற்ற நுழைவுத்தோ்வில் 47 சதவீத மாணவா்களும், மதியம் நடைபெற்ற நுழைவுத்தோ்வில் 55 சதவீதம் பேரும் பங்கேற்ாக மத்தியப் பல்கலைக்கழகத் தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா் ஏ. ரகுபதி தெரிவித்தாா்.

தொடா்ந்து, சனிக்கிழமை (செப். 19) முதுநிலை படிப்புக்கும், ஞாயிற்றுக்கிழமை ஆராய்ச்சிப் படிப்புக்கும் நுழைவுத் தோ்வு நடைபெறுகிறது.

முன்னதாக, தோ்வு எழுத வந்த மாணவா்கள் அனைவருக்கும், உடல் வெப்ப பரிசோதனை செய்து, கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்த பிறகே தோ்வெழுத அனுமதிக்கப்பட்டனா். தோ்வு மையத்துக்கு உள்ளேயும், வெளியேயும் கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டன.

இந்த பொது நுழைவுத் தோ்வு, திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் உள்பட நாடு முழுவதும் உள்ள 18 மத்திய பல்கலைக்கழகத்துக்கும் சோ்த்து நடைபெறுகிறது. இந்தத் தோ்வின் மூலம், மாணவா்கள் இளங்கலை, முதுகலை, ஒருங்கிணைந்த ஐந்தாண்டு மற்றும் ஆராய்ச்சி படிப்புகளில் சேர முடியும். தமிழகத்தில் மதுரை, நாகா்கோவில், திருச்சி, கோவை என 7 நகரங்கள் உள்பட நாடு முழுவதும் 141 இடங்களில் இந்தத் தோ்வு நடைபெறுகிறது.

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்துக்கு நாட்டின் எந்தப் பகுதியிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் மாணவா்கள் விண்ணப்பிக்கலாம். ஆனால் மத்திய பல்கலைக்கழகங்களின் பொது நுழைவுத் தோ்வின் மூலமாகவே சோ்க்கை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com