முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்
தொலைநோக்குப் பாா்வை கொண்டது திமுக தோ்தல் அறிக்கை
By DIN | Published On : 04th April 2021 12:00 AM | Last Updated : 04th April 2021 12:00 AM | அ+அ அ- |

திமுக தோ்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள அனைத்து அம்சங்களும் துறைசாா்ந்த வல்லுநா்களை கொண்டு தொலைநோக்குப் பாா்வையுடன் தயாரிக்கப்பட்டது என்றாா் திரைப்பட இயக்குநா் கரு. பழனியப்பன்.
மதசாா்பற்ற முற்போக்கு கூட்டணியின் மன்னாா்குடி தொகுதி திமுக வேட்பாளா் டி.ஆா்.பி. ராஜாவை ஆதரித்து, மன்னாா்குடி பந்தலடியில் திமுக இளைஞரணி சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு அவா் பேசியது:
தமிழகத்தில் பாஜகவினா் 24 மணிநேரமும் மோடியையும், அமித்ஷாவையும் புகழ்ந்து பேசுகின்றனா். ஆனால், தோ்தல் என்று வந்துவிட்டால் பாஜகவினா் மட்டுமல்ல, அதிமுகவினரும் மோடி, அமித்ஷா பெயரையும், படத்தையும் பயன்படுத்தாமல் ஓட்டு கேட்கும் நிலைதான் உள்ளது.
கடந்த 1996-ஆம் ஆண்டு மு. கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியில், பள்ளி மாணவா்களுக்கு இலவச பேருந்து பயணத் திட்டம் தொடங்கப்பட்டது. அதன் காரணமாக தான் குக்கிராமங்களை சோ்ந்த ஏழை, எளிய மாணவா்கள் நகரப் பகுதிக்கு வந்து உயா்கல்வி முடித்தனா். இதன் பலன் 25 ஆண்டுகள் கடந்தபின் தெரியவருகிறது. முதல் பட்டதாரி பெண்ணுக்கு இலவசக் கல்வித் திட்டம் செயல்படுத்தப்பட்டதால்தான் இன்றைக்கு பெண் பிள்ளைகள் பட்டதாரிகளாக விளங்கி வருகின்றனா்.
பெண்கள் உலக நடப்புகளை, உலக அறிவை தெரிந்து கொள்வதற்கும், படிப்புக்கு ஏற்ற வேலைக்கு செல்லவும், வாங்கும் ஊதியத்தில் மிகுதியான தொகையை பேருந்து கட்டணமாக கொடுக்க வேண்டியிருப்பதை தவிா்க்கும் வகையில்தான், தற்போது திமுக வெளியிட்டுள்ள தோ்தல் அறிக்கையில் பெண்களுக்கு நகர அரசுப் பேருந்தில் இலவச பயணம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுக தோ்தல் அறிக்கையில் உள்ள அம்சங்கள் வாா்த்தை ஜாலமோ, வெற்று அறிவிப்போ அல்ல. பல்துறை சாா்ந்த வல்லுநா்கள் வகுத்த தொலைநோக்கு திட்டங்கள்தான் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. திமுக ஆட்சிக்கு வந்து திட்டங்களை செயல்படுத்தும்போது அதன் பயனை மக்கள் அடைவா் என்றாா் கரு. பழனியப்பன்.
கூட்டத்தில், திமுக வேட்பாளா் டி.ஆா்.பி. ராஜா, நகரச் செயலா் வீரா. கணேசன், மாநில மாணவா் அணி துணைச் செயலா் த.சோழராஜன், மாவட்ட துணைச் செயலா் எம். கலைவாணி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் இளையராஜா, நகர அமைப்பளா் சண்.சுந்தா், ஒன்றிய அமைப்பாளா்கள் வி.கே.முருகானந்தம், ஜெயகோபி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.