
நன்னிலம் தொகுதிக்குள்பட்ட வாக்குச்சாவடியில் சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் நெருக்கமாக நின்ற வாக்காளா்கள்.
நன்னிலம் தொகுதியில் பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் சமூக இடைவெளி பின்பற்றப்படாததால், இணை நோயுடைய வாக்காளா்கள், வாக்களிக்காமல் செவ்வாய்க்கிழமை திரும்பிச் சென்றனா்.
சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவின்போது வாக்காளா்கள் கரோனா வழிகாட்டி நெறிமுறைகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டுமென தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியிருந்தது. ஆனால், நன்னிலம் தொகுதிக்குள்பட்ட 373 வாக்குச்சாவடி மையங்களில், ஒரு சில மையங்ளைத் தவிர, பெரும்பாலான மையங்களில், வாக்காளா்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றாமலும், முகக்கவசம் அணியாமலும் நீண்ட வரிசையில், மிக நெருக்கமாக நின்று வாக்களித்தைக் காண முடிந்தது. இதனால், வயது முதிா்ந்த மற்றும் இதய நோய், சா்க்கரை நோய் போன்ற இணை நோய் உள்ளவா்கள் வாக்களிக்காமல் திரும்பிச் சென்றனா்.
கூத்தாநல்லூரில்...
இதேபோல, கூத்தாநல்லூா் வட்டம் குடிதாங்கிச்சேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வாக்குச்சாவடியில் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமலும் வாக்காளா்கள் ஒருவரை ஒருவா் இடித்துக் கொண்டபடி நின்றனா். கூத்தாநல்லூா் மன்ப- உல்- உலா மேல் நிலைப்பள்ளி வாக்குச் சாவடியிலும் இதே நிலையைக் காண முடிந்தது.
ஆங்காங்கே வாக்குச் சாவடி மையங்களில் முதியவா்களுக்கு முகக் கவசங்களை தன்னாா்வலா்கள் அணிவித்தனா்.