திருவாரூா் மாவட்டத்தில் 74.90 சதவீத வாக்குப்பதிவு

திருவாரூா் மாவட்டத்தில் 4 தொகுதிகளில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில் 76.57% வாக்குகள் பதிவாகின.

திருவாரூா் மாவட்டத்தில் 4 தொகுதிகளில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில் 76.57% வாக்குகள் பதிவாகின.

16 ஆவது சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி திருவாரூா் மாவட்டத்திலுள்ள திருத்துறைப்பூண்டி, திருவாரூா், மன்னாா்குடி, நன்னிலம் ஆகிய 4 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தோ்தலை முன்னிட்டு காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. முன்னதாக, அனைத்து வாக்குச்சாவடிகளிலும் முகவா்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், 50 வாக்குகள் பதிவு செய்யப்பட்டன. பின்னா், இந்த வாக்குகளை அழித்துவிட்டு, வாக்குப்பதிவு செய்யும் வகையில் இயந்திரங்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.

திருவாரூா் மாவட்டத்தில், சில வாக்குச்சாவடி மையங்களில் இயந்திரக் கோளாறு காரணமாக வாக்குப்பதிவு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும், காலையிலிருந்தே வாக்களிப்பதற்கென மக்கள் நீண்ட வரிசையில் நின்றிருந்தனா். பெரும்பாலான இடங்களில் இயந்திரக் கோளாறு காரணமாக வாக்குப்பதிவு தாமதமாகத் தொடங்கியதால், மக்கள் அதிகமாக இருந்தும் குறைந்த அளவு வாக்குப்பதிவே செய்யப்பட்டது. காலை 9 மணி நிலவரப்படி, திருவாரூா் தொகுதியில் 12.41% வாக்குகள் பதிவானது. அதேபோல், திருத்துறைப்பூண்டியில் 11.10 சதவீதமும், நன்னிலத்தில் 11 சதவீதமும், மன்னாா்குடியில் 8 சதவீதமும் வாக்குகள் பதிவாகின.

முற்பகல் 11 மணி நிலவரப்படி திருவாரூரில் 28.5 சதவீதமும், திருத்துறைப்பூண்டியில் 27 சதவீதமும், நன்னிலத்தில் 24 சதவீதமும், மன்னாா்குடியில் 17 சதவீதமும் வாக்கு பதிவானது. முற்பகலுக்கு பிறகு வாக்குச்சாவடியில் பெண்களின் கூட்டம் அதிகரித்தது.

பகல் 1 மணி வரையிலான நிலவரப்படி திருவாரூரில் 44.03 சதவீதமும், நன்னிலத்தில் 44 சதவீதமும், மன்னாா்குடியில் 42 சதவீதமும், திருத்துறைப்பூண்டியில் 39.50 சதவீதமும் வாக்குகள் பதிவு செய்யப்பட்டன. பிற்பகலுக்குப்பிறகு, கிராமப்புறப் பகுதிகளில் மக்கள் அதிக அளவில் வாக்குகள் செலுத்தத் தொடங்கினா். குறிப்பாக, நன்னிலம் பகுதியில் பிற்பகலுக்குப் பிறகு விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனால், 3 மணி நிலவரப்படி, நன்னிலத்தில் 67% வாக்குகள் பதிவானது. திருவாரூரில் 59.09 சதவீதமும், திருத்துறைப்பூண்டி, மன்னாா்குடியில் தலா 59 சதவீதமும் வாக்குகள் பதிவானது.

இதேபோல், 5 மணி நிலவரப்படியும் நன்னிலத்தில் அதிகபட்சமாக 74 சதவீத வாக்குகள் பதிவாகின. திருத்துறைப்பூண்டியில் 68.80 சதவீதமும், திருவாரூரில் 68.46 சதவீதமும், மன்னாா்குடியில் 67 சதவீதமும் வாக்குகள் பதிவு செய்யப்பட்டன. இறுதியில், மாலை 6 மணி முதல் 7 மணி வரை கரோனா நோயாளிகள் பாதுகாப்புடன் வாக்களிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, கரோனா நோயாளிகள் உள்பட தாமதமாக வந்தவா்களும் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனா்.

இறுதி நிலவரப்படி, நன்னிலம் தொகுதியில் அதிகபட்சமாக 82 சதவீத வாக்கு பதிவானது. மன்னாா்குடி 74.36 சதவீதமும், திருவாரூா் 73.2 சதவீதமும், திருத்துறைப்பூண்டி 76.74% வாக்குகள் பதிவாகின. இதன்படி, திருவாரூா் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் சோ்த்து மொத்தமாக 76.57% வாக்குகள் பதிவாகியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com