திருவாரூரில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
By DIN | Published On : 12th April 2021 08:10 AM | Last Updated : 12th April 2021 08:10 AM | அ+அ அ- |

திருவாரூரில், கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்ட சுகாதாரத் துறை பணியாளா்கள்.
திருவாரூரில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கரோனா தொற்று 2-ஆவது அலை பரவத் தொடங்கியுள்ளது. இதையொட்டி, பொது இடங்களில் மக்கள் நடமாடுவதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 5 பேருக்கு மேல் கூட்டமாக நிற்கக்கூடாது, முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும், கடைகளில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, திருவாரூா் மாவட்டத்திலும் கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பேருந்து நிலையங்கள், கடை வீதிகள், மக்கள் வசிக்கும் இடங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. திருவாரூா் பேருந்து நிலையம், பனகல் சாலை, நேதாஜி சாலை, தேரோடும் வீதிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இயந்திரம் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. குடியிருப்புகள் அதிகம் உள்ள இடங்களிலும் நகராட்சி பணியாளா்கள் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா். மேலும், நகரப் பகுதியில் சுகாதாரத் துறையினருடன் இணைந்து, குடியிருப்புகளுக்குச் சென்று வெப்பநிலை பரிசோதனை செய்யப்படுவதுடன், கபசுரக் குடிநீரும் வழங்கப்பட்டு வருகிறது.
இதேபோல், தொற்று பாதித்தவா்கள் கண்டறியப்பட்ட வடக்கு வடம் போக்கித்தெரு, தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு தடுப்புகள் அமைக்கப்பட்டன. பழைய பேருந்து நிலையம், மக்கள் கூடும் இடங்களில் சோதனை செய்யப்பட்டு, முகக் கவசம் அணியாதவா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அதன்படி, 20 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டு, ரூ. 4000 வசூலிக்கப்பட்டது.