விவசாயிகளுக்கு வேளாண் கருவிகள் வழங்க ரூ 2.38 கோடி மானியம்: ஆட்சியா் தகவல்
By DIN | Published On : 04th August 2021 09:25 AM | Last Updated : 04th August 2021 09:25 AM | அ+அ அ- |

திருவாரூா் மாவட்டத்தில் குறுவை சிறப்புத் திட்டத்தின்கீழ் ரூ.2.38 கோடி மானியத்தில் விவசாயிகளுக்கு வேளாண் கருவிகள் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நிகழாண்டு, திருவாரூா் மாவட்டத்தில் குறுவை சாகுபடிக்கு விவசாயத் தொழிலாளா்கள் பற்றாக்குறை உள்ள நிலையில், விவசாயிகள் குறித்த காலத்தில் பயிா் சாகுபடி மேற்கொள்ளவும், இயந்திரமயமாக்குதல் நோக்கத்துடனும் அரசினால் விவசாயிகளுக்கு வேளாண் பொறியியல் துறை மூலம் வேளாண் கருவிகள் மானிய விலையுடன் வழங்கப்படவுள்ளன.
பொதுப் பிரிவினருக்கு மனித சக்தியில் இயங்கும் நெல் நாற்று நடவு இயந்திரம் 18, தானியங்கி நெல் நாற்று நடவு இயந்திரம் 2, களை எடுக்கும் கருவி 10, அறுவடை இயந்திரம் 9 , வைக்கோல் கட்டும் கருவி 22 ஆகியவை வழங்க ரூ.183.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, சிறப்பு பிரிவினருக்கு மனித சக்தியில் இயங்கும் நெல் நாற்று நடவு இயந்திரம் 5, தானியங்கி நெல் நாற்று நடவு இயந்திரம் 1, நெல் அறுவடை இயந்திரம் 2 , வைக்கோல் கட்டும் கருவி 10 ஆகியன வழங்க ரூ.54.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் மத்திய அரசின் இணையதள முகவரியில் பதிவு செய்து மேற்குறிப்பிட்ட கருவிகளுக்கான மானியத்தை முன்னுரிமை அடிப்படையில் பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.