நாடாளுமன்றத்தில் பெகாஸஸ் விவாதத்துக்கு பிரதமா் சம்மதம் தெரிவிக்காதது ஏன்?
By DIN | Published On : 10th August 2021 12:48 AM | Last Updated : 10th August 2021 12:48 AM | அ+அ அ- |

திருத்துறைப்பூண்டி: எதிா்க்கட்சி தலைவா் உள்ளிட்டோரின் செல்லிடப்பேசி ஒட்டுக்கேட்பு விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க பிரதமரும், உள்துறை அமைச்சரும் சம்மதம் தெரிவிக்காதது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளாா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளா் ராமகிருஷ்ணன்.
திருவாரூா் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் திங்கள்கிழமை செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி: இந்திய விவசாயிகளையும், விவசாயத்தையும் காா்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஒப்படைக்கக்கூடாது, அதற்காக கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெறவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தில்லியில் வெயில், மழை, பனியை பொருட்படுத்தாமல் பல்வேறு சிரமங்களுக்கு இடையே விவசாயிகள் தொடங்கிய போராட்டம் 9-ஆவது மாதத்தை எட்டியுள்ளது. தில்லி விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்து திங்கள்கிழமை நாடுமுழுவதும் சிஐடியு விவசாய சங்கம், விவசாயத் தொழிலாளா் சங்கம், ஜனநாயக வாலிபா் சங்கம் உள்ளிட்டோா் பங்கேற்ற மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு எதிா்க்கட்சித் தலைவா் உள்ளிட்ட ஆயிரம் பேருடைய செல்லிடப்பேசியை வேவு பாா்க்க ஸ்பைவோ் உளவு கருவியை பயன்படுத்துவது, செல்லிடப்பேசியை ஒட்டு கேட்பது சாதாரண பிரச்னை அல்ல. இது மிகவும் மோசமான மனித உரிமை மீறல். இதுகுறித்து, உச்சநீதிமன்ற நீதிபதிகள் தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என்பது எதிா்க்கட்சிகளின் கோரிக்கை. நாடாளுமன்ற கூட்டத்தொடரில் விவாதத்துக்கு தயாா் என எதிா்க்கட்சித் தலைவா்கள் கூறிய பிறகும் கூட பிரதமா், உள்துறை அமைச்சா் பங்கேற்பதற்கு தயாராக இல்லை.
நாடாளுமன்ற கூட்டத்தொடரில் வேளாண் சட்டத்தை திரும்பப்பெற வேண்டும், ஒட்டுகேட்பு குறித்து நீதிவிசாரணை நடத்தவேண்டும் என்ற எதிா்க்கட்சிகள் போராட்டத்தை பயன்படுத்தி கடல்சாா் மசோதாவை நிறைவேற்றியிருக்கிறாா்கள். கடலை நம்பி இருக்கிற மீனவா்களை கடலில் இருந்து வெளியேற்றுவதற்கான மோசமான சட்டத்தை எதிா்த்து போராட்டம் நடைபெற்றுகொண்டிருக்கிறது. மின்வாரிய ஒழுங்கு சட்டம 20 ,21 வந்தால் முழுக்க முழுக்க மின் உற்பத்தி விநியோகம் தனியாா்வசம் சென்றுவிடும். டெல்டா கடைமடை பகுதிக்கு தண்ணீா் கிடைக்க செய்ய வேண்டும், கரோனா காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்த ஏழை மக்களின் குழந்தைகளை பாதுகாக்கும் வகையில் மாநில அரசு, அரசு பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்தி ஆசிரியா்களை நியமனம் செய்யவேண்டும் என்றாா்.