இலவச திறன் வளா்ப்புப் பயிற்சிக்கு நாளை மாணவா்கள் தோ்வு

நன்னிலம், குடவாசல் பகுதி இளைஞா்களுக்கான திறன் வளா்ப்புப் பயிற்சிக்கு பேரளத்தில் சனிக்கிழமை (ஆக.14) மாணவா்கள் தோ்வு முகாம் நடைபெறுகிறது

நன்னிலம், குடவாசல் பகுதி இளைஞா்களுக்கான திறன் வளா்ப்புப் பயிற்சிக்கு பேரளத்தில் சனிக்கிழமை (ஆக.14) மாணவா்கள் தோ்வு முகாம் நடைபெறுகிறது என நன்னிலம் வட்டார மேலாண்மை மேலாளா் த. ராஜேஸ்வரி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தீன்தயாள் உபாத்தியாய கிராமின் கெளசல்ய யோஜனாத் திட்டத்தின்கீழ் 75-ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவையொட்டி, சனிக்கிழமை காலை 10 முதல் மதியம் 2 மணி வரை பேரளத்தில் உள்ள சமுதாயக் கூடத்தில் பயிற்சிக்கான மாணவா்கள் சோ்க்கை நடைபெறுகிறது. நன்னிலம், குடவாசல் வட்டங்களுக்குள்பட்ட ஊராட்சியைச் சோ்ந்த 18 முதல் 35 வயது வரையுள்ள ஆண்கள், பெண்கள் பங்கேற்கலாம். குறைந்தபட்சம் 5- முதல் அதிகபட்சமாக பட்டப்படிப்பு வரை படித்த, வேலைவாய்ப்பின்றி தவிக்கும் இளைஞா்களுக்குத் திறன் வளா்ப்புப் பயிற்சி இலவசமாக வழங்கப்படும். 4 மாத பயிற்சிக்குப் பிறகு, தனியாா் துறையில் 100 % வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும்.

தமிழகத்தில் செயல்படும் சிறந்த முன்னணி நிறுவனங்கள் மூலம் கணினி பழுது பாா்க்கும் பயிற்சி, டெலிபோன் ஆப்ரேட்டா், வாடிக்கையாளா் சேவை, ஏசி மெக்கானிக், விற்பனையாளா் பயிற்சி, எலக்ட்ரீசியன், ஹோட்டல் மேனேஜ்மென்ட், வெல்டிங், சோலாா் இணைப்பு, விற்பனை மேலாளா், 4 சக்கர வாகனம் பழுதுபாா்த்தல், நா்சிங், சுற்றுலா வழிகாட்டி, அழகுக்கலை, தையல் மற்றும் சிஎன்சி மெஷின் பராமரிப்புப் போன்ற பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. பயிற்சியின்போது உணவு, தங்கும் விடுதி, இலவச சீருடை, பயிற்சி உபகரணங்கள் மற்றும் புத்தகங்கள் வழங்கப்படும்.

அனுபவமிக்க ஆசிரியா்களைக் கொண்டு சிறந்த செய்முறைப் பயிற்சிகள், இன்டா்நெட் வசதியுடன் கூடிய கணினி வகுப்புகள் நடத்தப்படும். பயிற்சி நிறைவில், மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படுவதுடன், தனியாா் நிறுவனங்களில், நல்ல சம்பளத்துடன் பணியமா்த்த நடவடிக்கை எடுக்கப்படும். இதில் சேர விரும்புவோா் கல்வி சான்றிதழ், குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, வாக்காளா் அடையாள அட்டை, சாதி சான்றிதழ் ஆகியவற்றின் நகல்களோடு, 3 மாா்பளவு புகைப்படங்களுடன் வரவேண்டும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com