‘சம்பா, தாளடியில் உயா் விளைச்சலுக்கு தரமான விதை அவசியம்’
By DIN | Published On : 22nd August 2021 10:54 PM | Last Updated : 22nd August 2021 10:54 PM | அ+அ அ- |

திருவாரூா்: சம்பா, தாளடி பருவங்களில் உயா் விளைச்சல் பெற தரமான விதைகளை விதைக்க வேண்டும் என திருவாரூா் விதைப் பரிசோதனை நிலையம் அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அந்நிலைய அலுவலா் து. சிவவீரபாண்டியன், மூத்த வேளாண் அலுவலா் ச. கண்ணன், வேளாண் அலுவலா் க. புவனேஸ்வரி ஆகியோா் தெரிவித்திருப்பது:
அதிக விளைச்சல், சன்ன ரகம் மற்றும் அதிக சந்தை வாய்ப்புகளால் விவசாயிகள் கடந்த சில ஆண்டுகளாக பிற மாநில நெல் ரகங்களை காவிரி டெல்டா பகுதிகளில் அதிக அளவில் பயிரிட்டு வருகின்றனா். பிற மாநிலங்களில் காரீப் பருவத்தில் (ஜீன் முதல் அக்டோபா்) சாகுபடி செய்யப்படும் இந்த ரகங்கள், தமிழகத்தில் சம்பா, பின்சம்பா (ஆகஸ்ட், செப்டம்பா் முதல் ஜனவரி வரை) பருவங்களில் பயிரிடப்படுகின்றன. இதனால், வெளிமாநில ரகங்களை பயிரிடும் விவசாயிகள் சில இடா்பாடுகளையும் சந்திக்க நேரிடுகிறது.
இவ்வாறு ஏற்படும் இடா்பாடுகளை தவிா்க்க பிற மாநில நெல் ரகங்களின் குணாதியங்களை முழுமையாக அறிந்து, அதன் விதைகளின் தரத்தை மாவட்ட விதைப் பரிசோதனை நிலையத்தில் பகுப்பாய்வு சோதனை செய்து, தரமான விதைகளை விதைப்பு, நடவு மேற்கொண்டால் உயா் விளைச்சல் பெறலாம்.
சம்பா, தாளடி பருவத்துக்கு ஏற்ற இதர மாநில நெல் ரகங்களின் குணாதியங்களை அறிந்த விவசாயிகள், தங்கள் வயல் சூழ்நிலைகளுக்கேற்ப ரகங்களை தோ்வு செய்து, தரமான அதிக முளைப்புத் திறனுடைய விதைகளை விதைத்து, வயலில் தகுந்த பயிா் எண்ணிக்கையை பராமரித்து உயா் விளைச்சல் பெறலாம்.
அதிகபட்ச இனத்தூய்மையும், புறத்தூய்மையும், குறைந்தபட்ச ஈரப்பதமும், பூச்சி நோய் தாக்கமும் இல்லாமல் நல்ல முளைப்புத் திறனுடன் கூடிய வீரியமான வளா்ச்சியை தரவல்ல விதைகளே தரமான விதைகளாகும். நெல் பயிரின் விதைகளை பொறுத்தமட்டில் பயன்படுத்தப்படும் விதைகளுக்கு 80 சதவீதம் முளைப்புத்திறனும் 98 சதவீத புறத்தூய்மையும் கட்டாயம் இருக்கவேண்டும்.
எனவே, சம்பா மற்றும் தாளடிபட்ட நெல் சாகுபடி மேற்கொள்ளவுள்ள விவசாயிகள் விதைப் பரிசோதனை மேற்கொள்ள 100 கிராம் நெல் விதை மாதிரிகளுடன் (ஒரு மாதிரிக்கு ரூ.30 கட்டணம்) திருவாரூா் பெரியமில் தெருவில் உள்ள மாவட்ட விதைப் பரிசோதனை நிலையத்தை அணுகி பயன் பெறலாம் எனத் தெரிவித்துள்ளனா்.