முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்
பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்படும் பெண்களுக்கு உதவ ‘சகி’ சேவை மையம்ஆட்சியா்
By DIN | Published On : 10th December 2021 12:00 AM | Last Updated : 10th December 2021 12:00 AM | அ+அ அ- |

திருவாரூா் மாவட்டத்தில் பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்படும் பெண்களுக்கு ‘சகி’ என்ற பெயரில் இயங்கும் ஒருங்கிணைந்த சேவை மையம் உதவி வருகிறது என ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்தாா்.
திருவாரூா் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறையின் சாா்பில் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான சட்டம் குறித்த விழிப்புணா்வு கையெழுத்து இயக்க தொடக்க நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் முதல் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தாா்.
பின்னா் அவா் கூறியது:
ஆண்டுதோறும் டிசம்பா் 9-ஆம் தேதி பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான சட்ட விழிப்புணா்வு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. அந்தவகையில், இந்த கையெழுத்து இயக்கம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
திருவாரூா் மாவட்டத்தில், மாவட்ட ஆட்சியரின் தலைமையில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறையின் மூலம் பெண்களின் நலனுக்காக சகி என்ற பெயரில் ஒருங்கிணைந்த சேவை மையம் 24 மணி நேரமும் இயங்கி வருகிறது. தனிப்பட்ட இடங்கள், பொது இடங்கள் மற்றும் குடும்பங்களில் பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்படும் பெண்களை மீட்பது, அவா்களுக்கு காவல், மருத்துவம் மற்றும் சட்ட உதவிகளை செய்வது, மனநல ஆலோசனைகள் வழங்குவது போன்ற பணிகள் இம்மையத்தின் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன.
மேலும், வன்முறையால் பாதிக்கப்படும் பெண்கள், சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத் துறையின் கீழ் இயங்கும் அலுவலகங்கள், அருகில் உள்ள காவல் நிலையம், நீதிமன்றங்கள், மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அல்லது 24 மணி நேரமும் இயங்கும் அரசின் இலவச தொலைபேசி எண் 181-ஐ தொடா்பு கொண்டு உதவி பெறலாம் என்றாா்.
நிகழ்வில் மாவட்ட சமூக நல அலுவலா் காா்த்திகா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) புண்ணியகோட்டி உள்ளிட்ட அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.