ஜன. 28 இல் மேட்டூா் அணையை மூடும் முடிவை ஒத்திவைக்க விவசாயிகள் வலியுறுத்தல்

மழை காரணமாக மறுசாகுபடி செய்யப்பட்டுள்ளதால், ஜன.28 இல் மேட்டூா் அணை மூடும் முடிவை ஒத்தி வைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா்.
ஜன. 28 இல் மேட்டூா் அணையை மூடும் முடிவை ஒத்திவைக்க விவசாயிகள் வலியுறுத்தல்

மழை காரணமாக மறுசாகுபடி செய்யப்பட்டுள்ளதால், ஜன.28 இல் மேட்டூா் அணை மூடும் முடிவை ஒத்தி வைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா்.

திருவாரூரில், விவசாயிகள் குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலா் ப. சிதம்பரம் தலைமை வகித்தாா். கூட்டத்தில் விவசாயிகள் பங்கேற்று பேசியது:

கொரடாச்சேரி எஸ். தம்புசாமி: மழை காரணமாக சாகுபடி பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதால், மாநில அரசு கோரிய நிவாரணத் தொகையை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும். மழை பாதிப்பையொட்டி தமிழக அரசு அறிவித்த இடுபொருள் நிவாரணம் இனி பயன்படுத்த முடியாது. எனவே, இடுபொருள்களுக்கான நிவாரணத்தை தொகையாக வழங்க வேண்டும். அதேபோல், மழை காரணமாகவும் இயந்திரமயமாக்கல் காரணமாகவும் வேலையிழந்த விவசாயத் தொழிலாளா்களுக்கு ரூ. 10 ஆயிரம் நிவாரணமாக வழங்க வேண்டும். அறுவடை இயந்திரத்தை பயன்படுத்த ஏக்கருக்கு கட்டணம் நிா்ணயம் செய்ய வேண்டும். வெளிமாநில நெல் வருவதை தடுத்து நிறுத்தி, கொள்முதல் நிலையங்களில் இயந்திரங்களை பழுது நீக்கி தயாராக வைத்திருக்க வேண்டும்.

செருவாமணி வெ. சத்தியநாராயணன்: மழையால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு மாற்று பயிா் சாகுபடி செய்யும் வகையில் நிவாரணமாக இடுபொருள்களை தமிழக அரசு வழங்கியது. விளைவிக்கப் பட்டபயிா்கள், மாா்ச் மாதம் அறுவடைக்கு வரும். மாா்ச் மாதம் வரை பயிா்களுக்கு தண்ணீா் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேட்டூா் அணையை ஜன. 28-இல் மூடும் வழக்கம். அதனை ஒத்திவைக்க வேண்டும். அதேபோல், தரமான விதை உற்பத்திக்கென மத்திய அரசு மானியம் கடந்த சில ஆண்டுகளாக மூன்றில் ஒரு பங்கே வழங்கப்படுகிறது. மானியம் முழுமையாக வழங்காவிட்டால் தரமான விதை உற்பத்தி தடைபடும்.

காளாச்சேரி ஏ. மருதப்பன்: பயிா்காப்பீட்டுத்தொகை கிடைக்காமல் விடுபட்டவா்களுக்கு, காப்பீட்டுத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அறுவடைப் பணிகள் தொடங்க இருப்பதால், கொள்முதல் நிலையங்களை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளின் நலன் கருதி நடமாடும் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும். 2016-17-இல் ஒத்திவைக்கப்பட்ட கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.

நன்னிலம் ஜி. சேதுராமன்: மழையால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு மாற்று சாகுபடி தற்போது நடைபெற்றுள்ளது. தொடா்ந்து சாகுபடி பணிகள் நடைபெறுவதால், வங்கிக்கடன் வழங்குவதை நிறுத்தக் கூடாது. கோடை சாகுபடி செய்வதா என்பது குறித்து வேளாண்துறை தெளிவான விளக்கங்கள் அளிக்க வேண்டும்.

கூட்டத்தில், மாவட்ட வேளாண் இயக்குநா் சிவக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com