ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் மறைமுக ஏலம்: விவசாயிகளுக்கு அழைப்பு
By DIN | Published On : 04th February 2021 08:56 AM | Last Updated : 04th February 2021 08:56 AM | அ+அ அ- |

ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், மறைமுக ஏலம் வாயிலாக நெல் மூட்டைகளை விற்று பயனடையுமாறு விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருவாரூா் விற்பனைக் குழுச் செயலாளா் மா. சரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
திருவாரூா் மாவட்டத்தில், சம்பா தாளடி நெல் பயிா்கள் நடவு செய்யப்பட்டு, தற்போது அறுவடை பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நேரத்தில் விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல்லை, ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களுக்கு கொண்டு வந்து, மறைமுக ஏலம் மூலம் அதிக விலைக்கு விற்று பயனடையலாம்.
திருவாரூா், மன்னாா்குடி, திருத்துறைப்பூண்டி, வலங்கைமான், குடவாசல் மற்றும் பூந்தோட்டம் ஆகிய இடங்களில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள், கிட்டங்கி வசதிகளுடன் செயல்பட்டு வருகின்றன. இங்கு விளைபொருள்களை விற்கும் விவசாயிகளுக்கு, உடனடியாக வங்கிகள் மூலம் பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது.
மேலும் விவசாயிகள், இந்த விற்பனை கூடங்களில் தங்களின் விளைபொருள்களை இடைத்தரகா் மற்றும் எவ்வித கட்டணமுமின்றி நல்ல விலைக்கு விற்று பயன்பெறலாம். தங்கள் விளைபொருளை குவிண்டாலுக்கு ஒரு நாளைக்கு ஐந்து காசுகள் என்ற குறைவான வாடகைக்கும், பொருளின் மதிப்பில் 50 சதவீதத் தொகையை 5 சதவீத வட்டிக்கு, அதிகபட்சமாக 180 நாள்களுக்கு இருப்பு வைத்து, ரூ. 3 லட்சம் வரை பொருளீட்டு கடனாகப் பெற்று, விலை ஏற்றத்தின்போது விற்று பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...