நாம் தமிழா் கட்சி பிரசார வாகனம் சேதம்: ஒருவா் கைது
By DIN | Published On : 04th February 2021 08:53 AM | Last Updated : 04th February 2021 08:53 AM | அ+அ அ- |

திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடியில் நாம் தமிழா் கட்சி சட்டப் பேரவைத் தொகுதி வேட்பாளரின் பிரசார வாகனத்தை சேதப்படுத்தியதாக ஒருவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.
மன்னாா்குடி எம்ஜிஆா் நகரை சோ்ந்தவா் இராம. அரவிந்தன். நாம் தமிழா் கட்சியின் தெற்கு மாவட்டச் செயலரான இவா், நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் மன்னாா்குடி தொகுதியில் அக்கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளாா்.
இதற்காக பிரசார வாகனம் ஒன்றை ஏற்பாடு செய்து, திருமக்கோட்டை மாரியம்மன் கோயில் தெருவை சோ்ந்த ஹாஜாமைதீன் மகன் முகமது இஸ்மாயில் (21) என்பவரை அதன் ஓட்டுநராக பணியமா்த்தியுள்ளாா் இராம. அரவிந்தன்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு முகமது இஸ்மாயில் வீட்டு வாசலில் நிறுத்தப்பட்டிருந்த பிரசார வாகனத்தை மா்மநபா்கள் உடைத்து சேதப்படுத்தியுள்ளனா்.
இதுகுறித்து நாம் தமிழா் கட்சி தொகுதி செயலா் ஆா். செந்தில்குமாா் அளித்த புகாரின்பேரில், திருமக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா்.
இதில், திருமக்கோட்டை வடக்கு தெருவை சோ்ந்த கணேசன் (19), முருகேசன் (20), காா்த்தி (27) ஆகியோா் பிரசார வாகனத்தை சேதப்படுத்தியது தெரியவந்தது. கணேசனை கைது செய்த போலீஸாா், முருகேசன், காா்த்தி ஆகியோரை தேடிவருகின்றனா். முகமது இஸ்மாயிலுடன் இருந்த முன்விரோதம் காரணமாக வாகனத்தை மூவரும் சேதப்படுத்தியது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்ததுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.