அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் வியாபாரிகளுக்கே முன்னுரிமை: விவசாயிகள் குற்றச்சாட்டு

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளை விட வியாபாரிகளுக்கே முன்னுரிமை அளிக்கப்படுவதாக நன்னிலம் பகுதி விவசாயிகள் குற்றச்சாட்டுத் தெரிவித்து
நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் இயக்கம் செய்யாமல் தேங்கியிருக்கும் காட்சி. 
நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் இயக்கம் செய்யாமல் தேங்கியிருக்கும் காட்சி. 

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளை விட வியாபாரிகளுக்கே முன்னுரிமை அளிக்கப்படுவதாக நன்னிலம் பகுதி விவசாயிகள் குற்றச்சாட்டுத் தெரிவித்து, மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு செய்து விரைந்து நடவடிக்கை எடுத்திட வேண்டுமெனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் மற்றும் குடவாசல் பகுதிகளில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பல்வேறு குளறுபடிகள் நடப்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். விவசாயிகளை விட வியாபாரிகளுக்கே முன்னுரிமை அளித்து, அவர்கள் கொண்டு வரும் நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்து வியாபாரிகளிடமிருந்து, கொள்முதல் செய்யும் ஒவ்வொரு நெல் மூட்டைக்கும் ரூபாய் 50க்கு மேல் லஞ்சம் பெறுவதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதன் காரணமாக விவசாயிகள் கொண்டு வரும் நெல் முட்டைகளை விற்பனை செய்வதற்கு, வாரக் கணக்கில் காத்திருக்கவேண்டிய நிலை ஏற்படுகிறது. எவ்வித பாதுகாப்புமின்றி சாலையோரத்தில் பல நாள்கள் நெல் மூட்டைகளை அடுக்கி வைப்பதன் காரணமாக, ஆடு, மாடு, பன்றிகளால் நெல் மூட்டைகளுக்குப் பாதிப்பு ஏற்படுவதாகவும் குற்றம்சாட்டுகின்றனர். காலை 7 மணி முதல் மதியம் ஒரு மணி வரையும், மாலை 3 மணி முதல் 9 மணி வரையும் நெல் கொள்முதல் செய்திட அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டுமெனவும் கோரிக்கை வைத்துள்ளனர். 

குறுகிய காலமே நடைபெறும் நெல் கொள்முதல் பணிக்கு, விடுமுறை விடுவதைத் தவிர்த்திட வேண்டும். விடுமுறை இன்றி தொடர்ந்து தினசரி கொள்முதலை நடத்திட வேண்டும். கொள்முதல் நிலையத்திற்கு விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகளை அடுக்கி வைப்பதற்கு வசதியாக, கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை உடனடியாக இயக்கம் செய்திட வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகள் மீது தமிழக அரசும், மாவட்ட ஆட்சித் தலைவரும் விவசாயிகளுக்குப் பயன் அளிக்கும் வகையில் உடனடியாக, விரைந்து நடவடிக்கை எடுத்திட வேண்டும். 

மேலும் அதிகாரிகள் தொடர்ந்து நெல் கொள்முதல் நிலையங்களை தினசரி ஆய்வுசெய்து, குறைகளைக் களைந்திட வேண்டுமென தமிழக விவசாயிகள் நலச்சங்க தலைவர் ஜி.சேதுராமன், உள்ளிட்ட பல்வேறு விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com