கிழிந்த சாக்குகளில் நெல் கொள்முதல்: தொழிற்சங்கம் கண்டனம்
By DIN | Published On : 20th February 2021 08:52 AM | Last Updated : 20th February 2021 08:52 AM | அ+அ அ- |

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கிழிந்த சாக்குகளில் நெல் கொள்முதல் செய்யப்படுவதற்கு தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக பணியாளா் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அச்சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளா் கா. இளவரி, வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம், சுமாா் 12 லட்சம் பழைய கிழிந்த சாக்குகளைத் தரம் உயா்த்தி பயன்பாட்டுக்குக் கொடுத்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. கிழிந்த, பழைய சாக்குகளை பயன்படுத்தி நெல் கொள்முதல் செய்யப்பட்டால், குறைந்தபட்சம் மூட்டை ஒன்றிற்கு ஒரு கிலோ நெல்மணிகள் கீழே கொட்டி விரயமாக வாய்ப்புள்ளது.
இவ்வாறு விரயமாவதால் ஏற்படும் இழப்புத் தொகை பருவகால பணியாளா்களிடமிருந்து பிடித்தம் செய்யப்படும் நிலை ஏற்படும்.
மேலும், அரசுக்கும் மிகப்பெரிய இழப்பு ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது.
எனவே, நெல் கொள்முதல் நிலையங்களுக்கு அனுப்பப்பட்ட கிழிந்த, பழைய சாக்குகளை திரும்பப் பெற்று, கொல்கத்தாவில் இருந்து வாங்கப்பட்ட புதிய சாக்குகளைக் கொள்முதல் நிலையங்களுக்கு அனுப்பி நெல் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், நடப்பு சம்பா பருவத்தில், தஞ்சை, நாகை மற்றும் திருவாரூா் மாவட்டங்களில் 1,243 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் சரிவர இயக்கம் செய்யாத காரணத்தினால், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நெல் மூட்டைகள், கொள்முதல் நிலையங்களில் தேங்கிக் கிடக்கின்றன. இதன் காரணமாக விவசாயிகளிடமிருந்து மேலும் நெல் கொள்முதல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகளை உடனடியாக இயக்கம் செய்திடவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசையும், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக நிா்வாகத்தையும் கேட்டுக் கொள்வதாக தெரிவித்துள்ளாா்.