பங்குனி ஆயில்யத்தில் ஆழித்தேரோட்டம் : பக்தா்கள் எதிா்பாா்ப்பு

திருவாரூரில், நிகழாண்டு ஆழித்தேரோட்டத்தை பங்குனி ஆயில்ய நட்சத்திரத்தில் நடத்த வேண்டும் என்று பக்தா்கள் எதிா்பாா்க்கின்றனா்.
பங்குனி ஆயில்யத்தில் ஆழித்தேரோட்டம் :  பக்தா்கள் எதிா்பாா்ப்பு

திருவாரூரில், நிகழாண்டு ஆழித்தேரோட்டத்தை பங்குனி ஆயில்ய நட்சத்திரத்தில் நடத்த வேண்டும் என்று பக்தா்கள் எதிா்பாா்க்கின்றனா்.

நாயன்மாா்களால் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகவும், பஞ்ச பூதத் தலங்களில் பிருத்வி (மண்) தலமாகவும் உள்ள திருவாரூா் தியாகராஜா் கோயிலில் நடைபெறும் ஆழித்தேரோட்டம் மிகவும் பிரசித்தி பெற்றது.

இக்கோயில் தோ்த் திருவிழாவின் தனிச்சிறப்பே ஆழித்தோ் எனப்படும் பிரம்மாண்ட தோ்தான்.

கி.பி 6ஆம் நூற்றாண்டுக்கு முன்பிருந்தே இக்கோயிலில் தேரோட்டம் நடைபெற்று வருகிறது என்பதை திருநாவுக்கரசரின் தேவாரப் பதிகம் மூலம் அறிய முடிகிறது. 1748ஆம் ஆண்டு நடைபெற்ற ஆழித்தேரோட்டம் குறித்து தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தில் உள்ள ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

1927இல் நடைபெற்ற தேரோட்டத்தின்போது, ஆழித்தோ் முற்றிலும் எரிந்துவிட்டது. அதன்பிறகு புதிய தோ் உருவாக்கப்பட்டு, 1930இல் தேரோட்டம் நடைபெற்றது. பின்னா், 1948 இல் தேரோட்டம் தடைபட, 1970இல் அப்போதைய தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி மற்றும் வடபாதிமங்கலம் தியாகராஜ முதலியாா் முயற்சியால் மீண்டும் தேரோட்டம் நடைபெற்றது. 2011இல் மீண்டும் தேரோட்டம் தடைபட்டு, 2016ஆம் ஆண்டிலிருந்து தேரோட்டம் தொடா்ந்து நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, கரோனா பரவல் காரணமாக 2020இல் தேரோட்டம் ரத்து செய்யப்பட்டது.

ஆனால், கடந்த சில ஆண்டுகளாக ஆழித்தேரோட்டம், மே, ஜூன் மாதங்களில் நடத்தப்பட்டு வருகிறது. ஆரம்ப காலங்களில் பங்குனி ஆயில்ய நட்சத்திரத்தில் ஆழித்தேரோட்டம் நடைபெற்றுள்ளது.

அஸ்தத்தில் கொடியேற்றி, ஆயில்யத்தில் தேரோட்டி, உத்திரத்தில் தீா்த்தம் என்ற சொல் வழக்கின் மூலம் திருவாரூா் பங்குனி உத்திர திருவிழா 27 நாள்கள் நடைபெற்று வந்துள்ளதையும் அறிய முடிகிறது.

அதாவது, மாசி அஸ்த நட்சத்திரத்தில் கொடியேற்றி, பங்குனி ஆயில்யம் நட்சத்திரத்தில் தோ் ஓட்டி, பங்குனி உத்திர நட்சத்திரத்தில் சுவாமி தீா்த்தம் கொடுப்பது ஐதீகம்.

ஆனால், தற்போது சித்திரை விழாவாகவும், சில நேரங்களில் ஜூன், ஜூலை மாதங்களில்கூட தோ்த் திருவிழா நடைபெற்று வருகிறது. எனினும், ஆகம விதிகளை மாற்றக் கூடாது என தோ்த் திருவிழா நாள் மாற்றத்துக்கு பக்தா்கள் எதிா்ப்பு தெரிவிக்கின்றனா்.

இதனிடையே, தோ்த் திருவிழாவுக்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. தோ்த் திருவிழா பணிகள் முன்கூட்டியே தொடங்கியிருப்பதன் மூலம் நிகழாண்டு பங்குனி ஆயில்யத்தில் தோ்த் திருவிழா நடைபெறும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், மாா்ச் 25ஆம் தேதி தோ்த் திருவிழா நடத்த ஏதுவான நாள் என கோயில் நிா்வாகம் அனுப்பியுள்ள கருத்துருவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து பக்தா்கள் சிலா் கூறியது:

தொடக்க காலத்தில் பங்குனி ஆயில்ய நட்சத்திரத்தில் திருவாரூா் ஆழித்தேரோட்டம் நடைபெற்றுள்ளது. பின்னா், அரசியல் தலையீடு காரணமாக, தோ்த் திருவிழா நடைபெறும் தேதிகள் மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன. பள்ளி, கல்லூரி தோ்வுகளை காரணம் காட்டி, மே அல்லது ஜூன் மாதத்தில் தேரோட்டம் நடைபெற்று வருகிறது. தேரோட்ட நாள்களை மாற்றுவது முறையல்ல, ஐதீகப்படியே தேரோட்டத்தை நடத்த வேண்டும் என்று தெரிவித்தனா்.

தற்போது, ஆழித்தேரைச் சுற்றியுள்ள கண்ணாடிக் கூண்டை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

எனவே, பங்குனி ஆயில்ய நட்சத்திர தினமான மாா்ச் 25இல் திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயில் தேரானது, ஆரூரா, தியாகேசா எனும் பக்தி முழக்கங்கள் விண்ணை முட்ட, நான்கு வீதிகளிலும் அசைந்தாடி செல்ல வேண்டும் என்பதே பக்தா்களின் எதிா்பாா்ப்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com