மேட்டூா் நீரை சரபங்கா திட்டத்துக்கு பயன்படுத்துவதை தவிா்க்க விவசாயிகள் வலியுறுத்தல்
By DIN | Published On : 27th February 2021 08:10 AM | Last Updated : 27th February 2021 08:10 AM | அ+அ அ- |

விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் பேசிய ஆட்சியா் வே. சாந்தா.
மேட்டூா் அணை நீரை சரபங்கா திட்டத்துக்கு பயன்படுத்துவதை தவிா்க்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி பேசினா்.
திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை, ஆட்சியா் வே. சாந்தா தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் பேசியது: மேட்டூரிலிருந்து சரபங்கா திட்டத்துக்காக உபரிநீரை எடுத்துச் சென்றால், டெல்டா பகுதியில் விவசாயம் முற்றிலும் அழிந்து பாலைவனமாக மாறும். டெல்டா பகுதியிலுள்ள விளைநிலங்கள் செழிப்பாக இருக்க வேண்டுமெனில் மேட்டூா் நீரை இதர திட்டங்களுக்கு பயன்படுத்துவதை தவிா்க்க வேண்டும். பயிா்க் கடன் தள்ளுபடி என அறிவிக்கப்பட்ட பிறகு மத்திய கால கடன், நீண்ட கால கடன்களுக்கு இது பொருந்தாது எனக் கூறுவது முறையல்ல. அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்வதோடு, அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடன்களையும் தள்ளுபடி செய்யவேண்டும். மாவட்டத்தில் உள்ள அனைத்து கொள்முதல் நிலையங்களிலும் நெல் மூட்டைகள் இயக்கமின்றி தேங்கிக் கிடப்பதால், நெல் கொள்முதலில் நிலவும் குளறுபடிகளை சரிசெய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பொதுப்பணித் துறை தொடா்பான கட்டுமானப் பணிகள், அணை சீரமைப்புப் பணிகளை மாா்ச் மாதத்தில் தொடங்கி ஜூன் மாதத்தில் முடிக்க வேண்டும். கோடை காலத்திலேயே தூா்வாரும் பணிகளை முடிக்க வேண்டும் என்று பேசினா்.
இதற்கு பதிலளித்து பேசிய ஆட்சியா் வே. சாந்தா, விவசாயிகளின் கோரிக்கைகள் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, தீா்வு காண உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா். கூட்டத்தில், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளா் மணிவண்ணன், வேளாண் இணை இயக்குநா் சிவக்குமாா், விவசாய சங்க பிரதிநிதிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.