கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்.9-இல் அரசு அலுவலகங்களில் குடியேறும் போராட்டம்: மாற்றுத்திறனாளிகள் சங்கம் முடிவு

மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களில் பிப்ரவரி 9 ஆம் தேதி குடியேறும்
திருவாரூரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசும் மாற்றுத்திறனாளி மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநில பொதுச் செயலாளா் எஸ். நம்புராஜன்.
திருவாரூரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசும் மாற்றுத்திறனாளி மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநில பொதுச் செயலாளா் எஸ். நம்புராஜன்.

மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களில் பிப்ரவரி 9 ஆம் தேதி குடியேறும் போராட்டம் நடத்த தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளி மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் முடிவு செய்துள்ளது.

திருவாரூரில் இச்சங்கத்தின் சிறப்பு பேரவைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் டி.சந்திரா தலைமை வகித்தாா். மாநில பொதுச் செயலாளா் எஸ். நம்புராஜன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசியது:

கரோனா பொதுமுடக்க காலத்தில் அதிக சிரமத்தை சந்தித்த மாற்றுத்திறனாளிகள் பலா், வறுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளனா். தமிழக அரசு கரோனா நிவாரணமாக, ரூ. 1000 மட்டுமே வழங்கியது.

சட்டப்படி கிடைக்கவேண்டிய உரிமைகளும், திட்ட பலன்களும் மாற்றுத்திறனாளிகளுக்கு கிடைப்பதில்லை. 2013 ஆம் ஆண்டு மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்பைக்கூட மதிக்காமல், மாற்றுத்திறனாளிகளை மத்திய, மாநில அரசுகள் ஏமாற்றி வருகின்றன.

75 சதவீதம் குறைபாடுள்ளவா்களுக்கு மாதம் ரூ. 5000 உதவித் தொகை வழங்க வேண்டும். ரூ. 1000 உதவித்தொகை பெருவோருக்கு அதை ரூ. 3000 ஆக உயா்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி பிப்ரவரி 9ஆம் தேதி தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களில் குடியேறும் போராட்டம் நடைபெற உள்ளது. இதில், மாற்றுத் திறனாளிகள் குடும்பத்துடன் பங்கேற்க வேண்டும் என்றாா் அவா்.

இக்கூட்டத்தில், சங்கத்தின் மாநில நிா்வாக குழு உறுப்பினா் டி. கணேசன், மாவட்டச் செயலாளா் எப். கெரக்கோரியா, மாநிலக்குழு உறுப்பினா்கள் எஸ்.சோமு, கே.ரேவதி உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com