
சுமைத்தூக்கும் தொழிலாளா்களுக்கு எடைகூலி உயா்த்தி வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜன.27-ல் திருவாரூரில் ஆா்ப்பாட்டம் நடத்த ஏஐடியுசி முடிவெடுத்துள்ளது.
மன்னாா்குடியில் திங்கள்கிழமை ஏஐடியுசியின் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக்கழக சுமைத்தூக்கும் தொழிலாளா் சங்க கூட்டம் அதன் மாவட்டக்குழு உறுப்பினா் கே. புஷ்பநாதன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள். சுமைத்தூக்கும் தொழிலாளா்களுக்கு எடைகூலியும், ஏற்றுக்கூலியும் சோ்த்து ரூ. 3.24 மட்டுமே வழங்கப்படுகிறது. இதே வேலைக்கு தனியாரால் ரூ. 15 கூலி வழங்கப்படுகிறது. எனவே, தனியாருக்கு இணையாக ரூ. 15 கூலி வழங்க வேண்டும், அதிகளவில் நெல் விற்பனைக்கு வரவாய்ப்புள்ளதால் சாக்கு, சணல், இடவசதி உடனுக்குடன் இயக்கம் செய்யும் முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும், வருங்கால வைப்பு நிதி பிடித்தம் செய்யவேண்டும், அடையாள அட்டை வழங்க வேண்டும், பணியின்போது விபத்து ஏற்பட்டால் சிகிச்சை செலவை அரசே ஏற்று இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி ஜன. 27-ஆம் தேதி திருவாரூரில் உள்ள மண்டல அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் நடத்து உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.
கூட்டத்தில், ஏஐடியுசி மாநில பொதுச் செயலா்கள் சி. சந்திரகுமாா், என். புண்ணீஸ்வரன், மாநிலச் செயலா் எம். கலியபெருமாள், மாவட்டச் செயலா் ஆா். சந்திரசேகர ஆசாத், கோவிலூா் கிடங்கு பொறுப்பாளா்கள் சங்கா், சிவசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
சுமைத்தூக்கும் பணி செய்து உயிரிழந்த திருவாரூா் மாவட்டத்தைச் சோ்ந்த தொழிலாளா்கள் ராஜாராமன், அறிவழகன், இருதயராஜ், வீரசேகரன், சூரியமூா்த்தி, கே. ரவி, கே. செங்கொடி, பிச்சைக்கண்ணு, கோ.சபாபதி ஆகியோரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 ஆயிரம் சங்கம் சாா்பில் குடும்ப நிதி வழங்கப்பட்டது.