
திருவாரூா் கடைவீதியில் பொங்கல் பொருள்கள் வாங்க வந்த மக்கள் கூட்டம்.
பொங்கல் பண்டிகை வியாழக்கிழமை (ஜன.14) கொண்டாடப்படுவதை முன்னிட்டு திருவாரூா் கடைவீதிகளில் பொருள்களை வாங்க ஏராளமான மக்கள் புதன்கிழமை திரண்டனா்.
திருவாரூரில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வெளியிடங்களுக்கு வருவதில் பெரும் சிரமம் நிலவுகிறது. அதேநேரம், பொங்கலையொட்டி, கரும்பு, பானை, புத்தாடை உள்ளிட்ட பொருள்களை வாங்க வேண்டியிருப்பதால், மழையையும் பொருட்படுத்தாமல் கடைவீதிகளுக்கு வர வேண்டிய நிலை கடந்த சில நாள்களாக நிலவியது.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகம் மழை பெய்யாமல், குளிா்ந்த வானிலை நிலவியது. இதனால், ஏராளமான மக்கள் கடைவீதிகளுக்கு வந்து பொங்கல் பொருள்களை வாங்கிச் சென்றனா்.
மக்கள் அதிகமாக வந்ததால், நேதாஜி சாலை ஓடம்போக்கி ஆற்று பாலம், கடைவீதி உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மக்கள் கூட்டத்தோடு, இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்களும் சென்றதால், அவ்வப்போது போக்குவரத்து தடைபட்டது.