கோயில் நிலம் ஆக்கிரமிப்பு: உண்ணாவிரதம்
By DIN | Published On : 27th January 2021 09:28 AM | Last Updated : 27th January 2021 09:28 AM | அ+அ அ- |

ஆலங்குடியில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டோா்.
வலங்கைமான் வட்டம் ஆலங்குடி ஊராட்சியில் அபயவரதராஜப் பெருமாள் கோயிலுக்கு சொந்தமான இடத்தை தனிநபா் ஆக்கிரமித்து சுற்றுச்சுவா் அமைப்பதைக் கண்டித்து செவ்வாய்க்கிழமை அப்பகுதியினா் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கிராம நிா்வாக அலுவலா் அலுவலகம் முன் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு, ஆலங்குடி ஊராட்சித் தலைவா் மோகன் தலைமை வகித்தாா். திமுக ஒன்றியச் செயலாளா் தட்சிணாமூா்த்தி, ஒன்றியக்குழு முன்னாள் உறுப்பினா் ஞானசேகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், 100-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.
தகவலறிந்த வருவாய் ஆய்வாளா் சரவணன், வலங்கைமான் காவல் உதவி ஆய்வாளா் வீரபாண்டியன் ஆகியோா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா். இதையேற்று போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.