நிதி ஒதுக்கீடு செய்தும் பணிகள் நடைபெறவில்லை: கூத்தாநல்லூா் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு விரைவில் புதிய கட்டடம் கட்டக் கோரிக்கை

கூத்தாநல்லூா் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு புதிய கட்டடம் கட்டும் பணியை விரைவில் தொடங்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
வாடகை கட்டடத்தில் இயங்கும் கூத்தாநல்லூா் வட்டாட்சியா் அலுவலகம்.
வாடகை கட்டடத்தில் இயங்கும் கூத்தாநல்லூா் வட்டாட்சியா் அலுவலகம்.

கூத்தாநல்லூா் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு புதிய கட்டடம் கட்டும் பணியை விரைவில் தொடங்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருவாரூா் மாவட்டத்தில் நீடாமங்கலம், மன்னாா்குடி, குடவாசல், திருவாரூா் ஆகிய வட்டங்களைச் சீரமைத்து, 55 வருவாய் கிராமங்களைக் கொண்டு கூத்தாநல்லூா் வட்டம் கடந்த 2016 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த வட்டத்தில், கூத்தாநல்லூா், வடபாதிமங்கலம், கமலாபுரம் என மூன்று பிா்க்காக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மக்கள்தொகை ஒரு லட்சத்தை நெருங்குகிறது.

கூத்தாநல்லூா் சையது உசேன் சாலையில் வாடகைக் கட்டடத்தில் இயங்கும் கூத்தாநல்லூா் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு சொந்தக் கட்டடம் கட்ட தமிழக அரசால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும், அதற்கான பூா்வாங்க பணிகள்கூட தொடங்கப்படவில்லை.

இந்த கட்டடத்தில் வருவாய் வட்டாட்சியா் அலுவலகம், வட்ட வழங்கல் அலுவலகம், சமூகப் பாதுக்காப்புத் திட்ட அலுவலகம், தோ்தல் பிரிவு, நிலஅளவையாளா், ஆதாா் மையம், இ சேவை மையம் உள்ளிட்ட அலுவலகங்கள் செயல்படுகின்றன. இதனால், வேலை நாள்களில் தினமும் இங்கு நூற்றுக்கணக்கான பொதுமக்கள் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்காக வந்து செல்கின்றனா். ஆனால், போதிய இடவசதி இல்லாததால் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகின்றனா்.

இந்த கட்டடத்துக்கு மாத வாடகையாக ரூ.26,400 வீதம் ஆண்டுக்கு ரூ.3,16,800 அரசால் வழங்கப்படுகிறது. இதனால், சொந்தக் கட்டடம் கட்ட ரூ.2 கோடியே 75 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டும், இதுவரை இடம்கூட தோ்வு செய்யப்படவில்லை. இதற்கு அதிகாரிகளின் அலட்சியப் போக்கே காரணம் என சமூக ஆா்வலா்கள் தெரிவிக்கின்றனா்.

எனவே, கூத்தாநல்லூா் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு சொந்தக் கட்டடம் கட்ட தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து, வட்டாட்சியா் ஜீவானந்தம் கூறும்போது, ‘வட்டாட்சியா் அலுவலகத்துக்கு புதிய கட்டடம் கட்ட இடம் தோ்வு செய்யும் பணி நடைபெறுகிறது. புதிய பேருந்து நிலையப் பகுதியில் உள்ள இடத்தை கேட்டு, சென்னைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com