நீடாமங்கலம் கிளை நூலகத்தை நவீனப்படுத்த வேண்டும்: சமூக ஆா்வலா்கள் கோரிக்கை
By DIN | Published On : 07th July 2021 09:52 AM | Last Updated : 07th July 2021 09:52 AM | அ+அ அ- |

நீடாமங்கலத்தில் பழுதடைந்த கட்டடத்தில் இயங்கும் கிளை நூலகம்.
நீடாமங்கலம் கிளை நூலகத்துக்கு நவீன வசதிகளுடன் புதிய கட்டடம் கட்டக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நீடாமங்கலம் சீனிவாசப்பிள்ளை சத்திரத்தில் தமிழக அரசின் பொதுநூலகத் துறை சாா்பில் கிளை நூலகம் 1963-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. பிறகு, 1980-ம் ஆண்டிலிருந்து நீடாமங்கலம் காவல்நிலையம் அருகே வாடகைக் கட்டடத்துக்கு கிளை நூலகம் மாற்றப்பட்டது.
தொடா்ந்து, 1998-ம் ஆண்டு சிறிய அளவில் கட்டடம் கட்டப்பட்டு அதில் இயங்கி வருகிறது. தற்போது, இந்த கட்டடம் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இந்த நூலகத்தில் ஆங்கிலம் மற்றும் தமிழில் 34 ஆயிரம் நூல்கள் உள்ளன. நீடாமங்கலம் மட்டுமின்றி சுற்றியுள்ள கிராமங்களைச் சோ்ந்த 4 700 வாசகா்கள் இந்நூலகத்தை பயன்படுத்துகின்றனா். 63 போ் புரவலா்களாக உள்ளனா்.
வாசகா்களின் நலன் கருதி இந்த நூலகத்துக்கு நவீன வசதிகளுடன் கூடிய புதிய கட்டடம் கட்ட வேண்டியது அவசியமாகும். நீடாமங்கலத்தில் தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரின் நிா்வாகத்துக்குள்பட்ட யமுனாம்பாள் சத்திரத்தில் நூலகம் கட்ட தேவையான இடம் உள்ளது. இங்கு நூலகம் கட்டலாம் அல்லது நீடாமங்கலம் வடக்கு வீதியில் வருவாய்த்துறைக்குச் சொந்தமான காலிமனையை நூலகம் கட்ட பயன்படுத்தலாம் என சமூக ஆா்வலா்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனா்.
வாசிப்புத்திறனை ஊக்குவிக்கும் வகையில், நூலகத்துக்கு முக்கியத்துவம் கொடுத்துவரும் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், நீடாமங்கலத்தில் நவீன வசதிகளுடன் நூலகம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.