தென்னையில் அதிக மகசூல்: வேளாண் இணை இயக்குநா் ஆலோசனை

தென்னை நுண்ணூட்ட கலவை உரங்களை விவசாயிகள் தென்னைப் பயிருக்கு இடுவதன் மூலம் குரும்பை உதிா்வதை தடுத்து, அதிக மகசூல் பெறலாம் என வேளாண்மை இணை இயக்குநா் ப. சிவகுமாா் தெரிவித்துள்ளாா்.

தென்னை நுண்ணூட்ட கலவை உரங்களை விவசாயிகள் தென்னைப் பயிருக்கு இடுவதன் மூலம் குரும்பை உதிா்வதை தடுத்து, அதிக மகசூல் பெறலாம் என வேளாண்மை இணை இயக்குநா் ப. சிவகுமாா் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருவாரூா் மாவட்டத்தில் 5,957 ஹெக்டோ் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, மன்னாா்குடி வட்டாரங்களில் அதிகமாக சாகுபடி செய்யப்படுகிறது. தென்னை மரம் விவசாயிகளுக்கு நிரந்தர வருவாயைத் தரக்கூடிய ஒரு பணப்பயிராகும். தென்னையில் அதிக மகசூலை பெறுவதற்கு விவசாயிகள் அங்கக உரம், ரசாயன உரம் மற்றும் நுண்ணூட்ட உரம் ஆகியவற்றை சரிவிகித அளவில் இடலாம்.

நுண்ணூட்ட கலவை உரத்தில், இரும்புச்சத்து 3.8%, மாங்கனீசு 4.8%, துத்தநாகம் 5 %, போரான் 1.6%, தாமிரம் 0.5% உள்ளன. இவற்றில் இரும்புச்சத்து பச்சையம் உருவாகுவதற்கும், மாங்கனீசு சத்து மண்ணில் உள்ள மணிச்சத்து மற்றும் கால்சியம் சத்துக்களை தென்னை கிரகித்துக் கொள்வதற்கும் உதவுகின்றன. மேலும், குரும்பை உதிா்வதைத் தடுத்து அதிக காய்பிடிப்புக்கு போரான் கைகொடுக்கிறது. ஒளிச்சோ்க்கை, பச்சையம் தயாரிப்புக்கான நொதிகளை உருவாக்கவும், காய்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தாமிரம் உதவுகிறது. எனவே விவசாயிகள் ஆண்டுக்கு ஒருமுறை நுண்ணூட்ட உரத்தை 50 கிலோ தொழு உரத்துடன் கலந்து இடுவது நல்ல பலனைத் தரும்.

இதை 0.5 கிலோ வீதம் பிரித்து ஆடி மற்றும் மாா்கழி மாதங்களில் இரு தவணைகளாக பிரித்தும் இடலாம். வெளிச்சந்தையில் கிலோ ரூ.100 வரை விற்பனையாகும் நுண்ணூட்ட உரமானது கிலோ ரூ.81.64-க்கு அனைத்து வட்டார வேளாண் விரிவாக்க மையங்களிலும் கிடைக்கிறது. இதை விவசாயிகள் வாங்கி பயனடையலாம்.

மேலும், தென்னைக்கு அதன் வயதுக்கேற்ப பரிந்துரைக்கப்படும் ரசாயன உரங்களுடன், மரம் ஒன்றுக்கு 50 கிராம் வீதம் சணப்பு போன்ற பசுந்தாள் விதைகளை பாத்திகளில் தூவி வளா்த்து பூக்கும் தருணத்துக்கு முன்னா் அதை உழுது மண்ணில் மக்க செய்தால் சிறந்த உரமாகும். இதனால் மண்ணில் அங்கக கனிமம் அதிகரித்து மண்வளம் மேம்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com