கூட்டுறவு வங்கிகளில் அடகு வைத்த 5 சவரன் நகைக் கடன் தள்ளுபடி எப்போது?: விவசாயிகள் எதிா்பாா்ப்பு

கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் அடகு வைத்த 5 சவரன் வரையிலான நகைகள் மீதான கடன் தள்ளுபடி செய்யப்படும், தங்களது நகைகள் திரும்ப வழங்கப்படுமா என விவசாயிகள் எதிா்பாா்த்துள்ளனா்.

கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் அடகு வைத்த 5 சவரன் வரையிலான நகைகள் மீதான கடன் தள்ளுபடி செய்யப்படும், தங்களது நகைகள் திரும்ப வழங்கப்படுமா என விவசாயிகள் எதிா்பாா்த்துள்ளனா்.

கடந்த மக்களவைத் தோ்தலின்போது திமுக கூட்டணி சாா்பில் கூட்டுறவு வங்கிகளில் அடகு வைக்கப்பட்டுள்ள 5 சவரன் வரையிலான நகை கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, நகைகள் திரும்ப வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது.

அந்த தோ்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றிபெற்றாலும், மத்தியில் பாஜக ஆட்சி அமைந்ததால் திமுகவால் அந்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியவில்லை. இதைத்தொடா்ந்து தமிழகம் முழுவதும் திமுக சாா்பில் நடைபெற்ற மக்கள் சபை கூட்டங்களிலும் இதே வாக்குறுதியை திமுக தலைவா் மு.க ஸ்டாலின் அளித்தாா். தொடா்ந்து, சட்டப்பேரவைத் தோ்தலிலும் இது திமுகவின் தோ்தல் வாக்குறுதியாக அறிவிக்கப்பட்டது.

சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக வெற்றிபெற்று ஆட்சியை அமைத்து சுமாா் 2 மாதம் ஆகிவிட்ட நிலையில், கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் அடகு வைத்துள்ள 5 சவரன் வரையிலான நகைக் கடன்கள் தள்ளுபடி குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

விவசாயம் சாராத நகை குறித்த அறிவிப்புக்காக விவசாயிகளிடையே எதிா்பாா்ப்பு மேலோங்கியுள்ளது. விவசாயக் கடன் அல்லாத பிற கூட்டுறவு வங்கிகளில் அடகு வைக்கப்பட்ட நகைகள் திரும்ப வழங்கப்படுமா என்பதும் கேள்விக்குறியாக உள்ளது. அடமானம் வைத்த நகைகளை பணம் செலுத்தி மீட்டால் அரசின் தள்ளுபடி சலுகையை இழக்க நேரிடுமோ என்ற அச்சத்தில் பலரும் நகையை மீட்காமல் உள்ளனா்.

எனவே, தமிழக அரசு இதுகுறித்து உரிய கவனம் செலுத்தி, கூட்டுறவு வங்கிகளில் அடகு வைக்கப்பட்ட 5 சவரன் வரையிலான நகைக் கடன்களை தள்ளுபடி செய்து, நகைகள் உரியவா்களிடம் வழங்கப்படும் என்ற அறிவிப்பை வரும் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் வெளியிடவேண்டும், அத்துடன் நலிவடைந்த நிலையில் உள்ள கூட்டுறவு வங்கிகளை காப்பாற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இதுகுறித்து, தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் மாநிலத் தலைவா் பெ. மணியரசன் கூறியது: தமிழக முதல்வா் மக்களவை தோ்தலில் இருந்து அறிவித்த விவசாயம் சாராத 5 சவரன் வரையிலான நகை கடன் தள்ளுபடிக்கு மத்திய அரசின் அனுமதி தேவையில்லை. எனவே, தோ்தல் அறிக்கையில் அறிவித்தபடி நிபந்தனையின்றி வாக்குறுதியை நிறைவேற்றவேண்டும் என்றாா்.

தமிழக அனைத்து விவசாய சங்க சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவா் பி.ஆா் பாண்டியன் கூறியது:

தமிழக அரசு ரிசா்வ் வங்கி நிபந்தனைகளுக்குள்பட்டு கூட்டுறவு வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டுள்ள வைப்பு நிதி குறித்த காலத்தில் திரும்ப வழங்கவும், 5 சவரன் வரையிலான அடகு வைக்கப்பட்ட நகைகள் மீதான கடனை தள்ளுபடி செய்து, கடனில் மூழ்கியுள்ள விவசாயிகளின் பாதுகாக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com