திருவாரூரில் நிமோனியா தடுப்பூசி முகாம்
By DIN | Published On : 29th July 2021 09:56 AM | Last Updated : 29th July 2021 09:56 AM | அ+அ அ- |

திருவாரூா் நகராட்சிக்குள்பட்ட கொடிக்கால்பாளையம் நகர ஆரம்ப சுகாதார நிலையத்தில், முதல் தவணை நியூமோகாக்கல் நிமோனியா தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன், எம்எல்ஏ. பூண்டி.கே. கலைவாணன் ஆகியோா் புதன்கிழமை தொடங்கி வைத்து பாா்வையிட்டனா்.
பின்னா் மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்தது: நிமோனியா நோய் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது. குறிப்பாக 2 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு 15 சதவீதம் இறப்பை ஏற்படுத்துகிறது. இந்திய அளவில் 1.2 மில்லியன் குழந்தைகள் தனது 5-ஆவது வயதுக்குள் இறக்கின்றனா். நிமோனியா நோய்க்கு தடுப்பு மருந்தாக, நியூமோகாக்கல் காஞ்சுகேட் தடுப்பூசி என்னும் மருந்து பயன்படுத்தப்படுகிறது.
இத்தடுப்பு மருந்தின் மூலம் 80 சதவீதம் நிமோனியாவை கட்டுப்படுத்த முடியும். இத்தடுப்பு மருந்தானது ஜூன் 2020 நிலவரப்படி 146 நாடுகளில் செலுத்தப்பட்டு வருகிறது. மேலும், இந்தியாவில் 2017 முதல் 5 மாநிலங்களில் செலுத்தப்பட்டு வருகிறது.
தற்போது தமிழ்நாட்டில் இத்தடுப்பூசி திட்டமானது ஜூலை 13-ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இத்தடுப்பூசியானது, குழந்தையின் 6-ஆவது வாரம் முதல்தவணை போலியோ ரோட்டா ஐபிவி பேண்ட்வெலேண்ட் தடுப்பூசிகளுடன், 14-ஆவது வாரம் 3-ஆவது தவணை போலியோ ரோட்டா பேண்ட்வெலேண்ட் 2-ஆம் தவணை ஐபிவி தடுப்பூசிகளுடன் மற்றும் 9 -ஆவது மாதங்கள் முதல்தவணை மூளைகாய்ச்சல் தடுப்பூசி தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசிகளுடன் ஆகிய தவணைகளில் அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர ஆரம்ப சுகாதா நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அங்கான்வாடி மையங்களில் நிமோகாக்கல் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
திருவாரூா் மாவட்டத்தில் ஆண்டுக்கு 15,130 குழந்தைகள் தேசிய தடுப்பூசி திட்டத்தின்கீழ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு பயன்பெற்று வருகின்றனா். இதில் 1,260 குழந்தைகளுக்கு முதல்தவணையாக 6-ஆவது வாரத்தில் நிமோகாக்கல் தடுப்பூசி போடப்படுவதன்மூலம் குழந்தைகளுக்கு நிமோனியா மற்றும் மூளை காய்ச்சல் நோய் பாதிப்பு தடுக்கப்படுகிறது என்றாா்.
நிகழ்ச்சியில், சுகாதாரத்துறை துணை இயக்குநா் கீதா, கோட்டாட்சியா் பாலச்சந்திரன், வட்டாட்சியா் தனசேகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.