கூத்தாநல்லூர்: பாசன வாய்க்காலை தூர்வார ம.ம.கட்சி வட்டாட்சியரிடம் மனு 

கூத்தாநல்லூரில் பிரதான சாலை வழியாகச் செல்லக் கூடிய பாசன வாய்க்காலை தூர்வார வலியுறுத்தி, மனிதநேய மக்கள் கட்சியினர், வட்டாட்சியர் மற்றும் நகராட்சி ஆணையரிடம் மனுக்கள் வழங்கினர்.  
நகராட்சி ஆணையர் லதாவிடம், மனுவை வழங்குகிறார் மாநில விவசாய அணிச் செயலாளர் ரஹ்மத்துல்லாஹ்.
நகராட்சி ஆணையர் லதாவிடம், மனுவை வழங்குகிறார் மாநில விவசாய அணிச் செயலாளர் ரஹ்மத்துல்லாஹ்.

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில் பிரதான சாலை வழியாகச் செல்லக் கூடிய பாசன வாய்க்காலை தூர்வார வலியுறுத்தி, மனிதநேய மக்கள் கட்சியினர், வட்டாட்சியர் மற்றும் நகராட்சி ஆணையரிடம் மனுக்கள் வழங்கினர். 
இதுகுறித்து, மனிதநேய மக்கள் கட்சியின் மாநில விவசாய அணிச் செயலாளர் ஹெச்.எம்.டி.ரஹ்மத்துல்லாஹ் கூறியது, கூத்தாநல்லூர் பழைய நகராட்சியை ஒட்டிச் செல்லக் கூடிய வாய்க்கால் மற்றும் கூத்தாநல்லூர் சிவன் கோயில் தெரு முனையில் தொடங்கும் வாய்க்காலும் நகரின் முக்கியக் குளங்களுக்கு நீர் நிரப்பி நிலத்தடி நீரை உயர்த்தும் முக்கிய நீர் வழித் தடங்களாகும்.

மேலும், இவைகள் இரண்டும் விவசாய நிலங்களுக்கு நீரைப் பெற்றுத் தரும் முக்கிய வாய்க்கால்களாகும். இவை இரண்டிற்கும் வெண்ணாற்றிலிருந்து தான் நீர் வரும். இந்த இரண்டு வாய்க்கால்களும் நீண்ட ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் செடிகளும், கொடிகளும், குப்பைகளும், புட்களும் மண்டி தூர்ந்து போய் உள்ளன. ஆற்றில் தண்ணீர் வரத்து இருந்தும், பாசன வாய்க்காலில் தண்ணீர் வருவதற்கு முடியாமல், அடைபட்டு உள்ளது. 

மேலும், இந்த இரண்டு வாய்க்கால்களிலும் தண்ணீர் தேங்கி கொசுக்களும், பூச்சிகளும் உற்பத்தியாகியுள்ளன. இதனால், காலரா, டெங்கு, சிக்குன் குனியா உள்ளிட்ட தொற்று நோய்கள் பரவி, சுகாதாரக்கேட்டையும் உருவாக்கக் கூடிய தலமாக அமைந்துள்ளன. 

பாசன வாய்க்கால் மூலம் விவசாயத்திற்கு தண்ணீர் செல்லாததால், 500 க்கும் மேற்பட்ட விவசாய நிலங்களில் விவசாயம் செய்ய முடியாமல் விவசாயமும் பாதிக்கப்பட்டு, விவசாயிகளும் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். 

கூத்தாநல்லும் மற்றும் சுற்றுப்புற கிராம பொதுமக்கள், விவசாயிகளின் நலன் கருதி, மாவட்ட ஆட்சியர், பொதுப்பணித் துறையினர் நேரில் பார்வையிட்டு, பாசன வாய்க்காலை தூர்வாரிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com