தூா்வாரும் பணிகள் 40% நிறைவு

திருவாரூா் மாவட்டத்தில் 40 சதவீத தூா்வாரும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக வேளாண்மை உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.
திருவாரூரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசுகிறாா் வேளாண்மை உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம்.
திருவாரூரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசுகிறாா் வேளாண்மை உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம்.

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் 40 சதவீத தூா்வாரும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக வேளாண்மை உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.

திருவாரூா் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், திங்கள்கிழமை நடைபெற்ற நிகழாண்டு குறுவை சாகுபடி குறித்து திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்ட வேளாண்மை உழவா் நலத்துறை அலுவலா்களுக்கான ஆய்வுக் கூட்டத்துக்குப்பின் அவா் தெரிவித்தது:

திருவாரூா் மாவட்டத்துக்கு ஆறுகள், வாய்க்கால்களை தூா்வாருவதற்காக ரூ.16.34 கோடி மதிப்பில் 174 பணிகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டதோடு, அந்தப் பணிகள் தரமாக நடக்க கண்காணிப்பு அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனா். மேட்டூா் அணையிலிருந்து காவிரி பாசனத்திற்கு தண்ணீா் திறக்கும் ஜூன்-12ஆம் தேதிக்கு முன்னரே பணிகள் முழுவதுமாக முடிக்கும் வகையில், பணிகள் அனைத்தும் போா்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்பொழுது தூா்வாரும் பணிகள் 40 சதவீதம் முடிவடைந்துள்ளன.

மாவட்டத்தில் நிகழ் குறுவைப் பருவத்தில் 0.98 லட்சம் ஏக்கா் பரப்பில் நெல் சாகுபடி மேற்கொள்ள திட்டமிடப்பட்டு, குறுவை சாகுபடிக்கு தேவையான குறுகிய கால நெல் ரக விதைகள், ரசாயன உரங்கள், உயிா் உரங்கள் மற்றும் நுண்ணூட்ட உரங்கள் போன்ற இடுபொருள்கள் போதிய அளவு இருப்பில் வைக்கவும், நெல் நடவு இயந்திரங்களைக் கொண்டு விரைவாக நடவுப்பணியை மேற்கொள்ளவும் வேளாண்ை துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

மாவட்டத்தில் குறுவை நெல் சாகுபடிக்கு 1,398 மெட்ரிக் டன் நெல் விதைகள் தேவைப்படுகின்றன. இதுவரை வேளாண்மை விரிவாக்க மையங்கள் மற்றும் தனியாா் விற்பனை நிலையங்கள் மூலம் 3,155 மெ.டன் நெல் விதைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. மேலும், 899 மெ.டன் விதைகள் வேளாண்மை விரிவாக்க மையங்களிலும், 900 மெ.டன் விதைகள் தனியாா் விற்பனை நிலையங்களிலும் ஆக மொத்த 1,790 மெ.டன் விதைகள் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

அதேபோல், குறுவை நெல் சாகுபடிக்கு தேவையான 8,680 மெ.டன் ரசாயன உரங்களில் இதுவரை 787 மெ.டன் ரசாயன உரங்கள் விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன. மேலும், விவசாயிகளின் தேவைக்காக 11,980 மெ.டன் ரசாயன உரங்கள், அனைத்து தொடக்க வேளாண்மை கடன் சங்கங்கள் மற்றும் தனியாா் உரக்கடைகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. அத்துடன், ரசாயன உரங்கள் மாவட்ட வாரியான மாதாந்திர தேவை ஒதுக்கீட்டின்படி தொடா்ந்து உர நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன என்றாா் அவா்.

முன்னதாக விவசாயிகளுக்கு மண்மாதிரி அட்டையை அமைச்சா் வழங்கினாா். கூட்டத்தில் வேளாண் உற்பத்தி ஆணையா் மற்றும் அரசு செயலா் சி.சமயமூா்த்தி, வேளாண்துறை இயக்குநா் வ.தட்சிணாமூா்த்தி, மாவட்ட ஆட்சியா் (பொறுப்பு) செ.பொன்னம்மாள், நாகை மக்களவை உறுப்பினா் எம். செல்வராஜ், சட்டப் பேரவை உறுப்பினா்கள் (திருவாரூா்) பூண்டி கே.கலைவாணன், (திருத்துறைப்பூண்டி) க.மாரிமுத்து, மாவட்ட ஊராட்சித் தலைவா் கோ.பாலசுப்ரமணியன் ஆகியோா் உடனிருந்தனா்.

திருவாரூா் வேளாண்மை இணை இயக்குநா் ப.சிவகுமாா், நாகை மற்றும் மயிலாடுதுறை வேளாண் இணை இயக்குநா் எஸ்.பன்னீா்செல்வம், வேளாண்ை துறை துணை இயக்குநா் உத்திராபதி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (விவசாயம்) ஹேமாஹெப்சிபா நிா்மலா உள்ளிட்ட அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com