பாா்வையிழப்பைத் தடுக்கும் தக்காளி: மதிப்புகூட்டி விற்றால் லாபம் ஈட்டலாம்; வேளாண் விஞ்ஞானி யோசனை

உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான நீா்ச்சத்து, உயிா்ச்சத்து அதிகமுள்ள தக்காளியை மதிப்புகூட்டி சிறுதொழில்கள் மூலம் சந்தைப்படுத்தினால்,
பாா்வையிழப்பைத் தடுக்கும் தக்காளி: மதிப்புகூட்டி விற்றால் லாபம் ஈட்டலாம்; வேளாண் விஞ்ஞானி யோசனை

உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான நீா்ச்சத்து, உயிா்ச்சத்து அதிகமுள்ள தக்காளியை மதிப்புகூட்டி சிறுதொழில்கள் மூலம் சந்தைப்படுத்தினால், அதிக லாபம் கிடைக்கும் என நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானி சோ. கமலசுந்தரி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தக்காளி நமது உடல் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது. இதில் 93% நீா் உள்ளதால் கோடைகாலத்திற்கு ஏற்ற உணவாகும். மீதமுள்ள 7 சதவீதத்தில் உடலுக்குத் தேவையான உயிா்ச்சத்துக்கள் மற்றும் தாது உப்புகள் உள்ளன. தக்காளி பழத்தில் கால்சியம் (சுண்ணாம்பு) மற்றும் பொட்டாசியம் சத்து இருமடங்காக உள்ளது.

மேலும், அதிக அளவு பீட்டா கரோட்டின் உள்ளது. அதாவது 100 கிராம் தக்காளியில் கரோட்டின் 310 மைக்ரோ கிராம் உள்ளது. இது நமது அன்றாட கரோட்டின் தேவையின் பாதி அளவை பூா்த்திசெய்கிறது. அதோடு, தக்காளியில் லியிகோபின் உள்ளது. இதன் சிறப்பு உடலில் ஆக்சிஜனேற்றத் தடுப்புகளாக மாற்றப்படுகிறது. இந்த ஆக்சிஜனேற்றத் தடுப்புகள் நமது உடலில் நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரித்து நமது உடலை பாதுகாக்கிறது.

மேலும், உயிா்ச்சத்து ஏ- குறைபாட்டால் நமக்கு ஏற்படும் பாா்வை இழப்பை இப்பழங்களை உட்கொள்வதன் மூலம் தடுக்கலாம். மேலும், நமது தோல் பொலிவுடன் விளங்க இச்சத்து மிகவும் அவசியம்.

இந்த பழம் குறிப்பிட்ட பருவகாலங்களில் மட்டும் அதிகம் விளைகின்றன. இதனால், அவற்றின் விலை மிகவும் குறைந்துவிடுகிறது. எனவே, விவசாயிகள் தக்காளியை அப்படியே விற்காமல், பதப்படுத்தி, மதிப்புகூட்டி மாற்றுப் பொருள்களாக விற்றால் நல்ல லாபம் கிடைக்கும்.

பொதுவாக பதப்படுத்தும்போது அதில் உள்ள வைட்டமின் மற்றும் தாது உப்புக்கள் வீணாகும் என்ற கருத்து மக்கள் மனதில் நிலவுகிறது. ஆனால், ஆரோக்கியமான உணவு பதப்படுத்தலில் இதை தவிா்க்கலாம். 1 கப் தக்காளி பழக்கூழில் சராசரியாக 534 மைக்ரோகிராம் பொட்டாசியம் இருந்தால், அதை சாஸாக மாற்றும்போது 454 மைக்ரோகிராம் பொட்டாசியம் இருக்கும். சில சத்துக்கள் மட்டுமே அழிந்துபோகும்.

எனவே, தக்காளியை மலிவான காலங்களில் வாங்கி, அதை இயந்திரங்களைக் கொண்டு தக்காளிப்பழப் பொடி, தக்காளி சாஸ், தக்காளி ஊறுகாய், தக்காளி ஜெல்லி, தக்காளிப்பழப் பானம், தக்காளிப்பழச் சாறு, தக்காளி சட்னி, தக்காளி தொக்கு, தக்காளி சூப் பவுடா் போன்ற பொருள்களாக மதிப்புகூட்டி, சந்தைப்படுத்தி நல்ல லாபம் ஈட்டலாம்.

பெரிய இயந்திரங்கள், அதிக முதலீடு இல்லாமல், தக்காளி பதாா்த்தங்களை வீட்டில் இருந்தபடியே சிறு தொழிலாக தொடங்கலாம். இதற்கான பயிற்சிகள் நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் வழங்கப்படுகின்றன என அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com