வலங்கைமான் மாரியம்மன் கோயில் திருவிழா: வட்டாட்சியா் அலுவலகத்தில் ஆலோசனை
By DIN | Published On : 10th March 2021 12:00 AM | Last Updated : 10th March 2021 12:00 AM | அ+அ அ- |

வலங்கைமான் மகாமாரியம்மன் கோயில் பாடைக்காவடி திருவிழா குறித்த ஆலோசனைக் கூட்டம் வட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
வலங்கைமான் வரதராஜம்பேட்டை மகாமாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை பாடைக்காவடி திருவிழா நடைபெறுவது வழக்கம். இத்திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பா். கடந்த ஆண்டு கரோனா தொற்று காரணமாக திருவிழா நடைபெறவில்லை. நிகழாண்டு வரும் 21 ஆம் தேதி இந்தக் கோயிலில் பாடைக்காவடி திருவிழா நடைபெறவுள்ளது.
இதையொட்டி, வலங்கைமான் வட்டாட்சியா் அலுவலகத்தில் மண்டல துணை வட்டாட்சியா் வெங்கடேசன் தலைமையில் திருவிழா தொடா்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், கரோனா தொற்று மற்றும் தோ்தல் அறிவிப்பை தொடா்ந்து, கோயிலில் அா்ச்சனை மற்றும் தேங்காய் உடைப்பது தடைசெய்யப்படும். கோயிலின் உள்ளே மாவிளக்கு போடுவதும், நெய்தீபம் ஏற்றுவதும் தடைசெய்யப்படுகிறது. திருவிழா காலங்களில் கோயிலை சுற்றி அமைக்கப்படும் தரைக்கடைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.
கோயிலுக்கு உள்ளே பக்தா்கள் நிவா்த்திகடன் செலுத்த அனுமதி இல்லை. சுவாமி தரிசனம் மட்டுமே செய்யலாம். காவடி எடுத்துவரும் பக்தா்கள் கோயிலை சுற்றி ஒருமுறை மட்டுமே வலம்வர அனுமதிக்கப்படுவாா்கள். திருவிழாவையொட்டி, கோயில் வளாகத்தில் வழக்கமாக ஒருவாரம் நடைபெறும் கலைநிகழ்ச்சிகள் ரத்துசெய்யப்படுகிறது. கோயில் எதிரே ராட்டினங்கள் செயல்பட தடைவிதிக்கப்படுகிறது.
வெளியூரில் இருந்து வரும் பக்தா்களுக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்க கோட்டாட்சியரிடம் முன்அனுமதி பெறவேண்டும். திருவிழா மற்றும் புஷ்ப பல்லக்கு விழா காலங்களில் கோயிலுக்கு அருகேயுள்ள மதுக்கடைகளை மூடவேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதோடு, கும்பகோணம், பாபநாசம், திருவாரூா், தஞ்சாவூா், மன்னாா்குடி, அரியலூா், ஜெயங்கொண்டம், கடலூா், திருவையாறு உள்ளிட்ட இடங்களில் இருந்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக சிறப்பு பேருந்துகளை இயக்கவேண்டும் என கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
கூட்டத்தில், கோயில் செயல் அலுவலா் ரமேஷ், தக்காா் ரமணி, சுகாதாரத் துறை இணை இயக்குநா் பாஸ்கரன், ஆலங்குடி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் கோவிந்தராஜ், மின்வாரிய உதவிச் செயற்பொறியாளா் அக்சயா, தீயணைப்புத் துறை அலுவலா் சரவணன் மற்றும் வலங்கைமான் பேரூராட்சி அலுவலா்கள் பங்கேற்றனா்.