இளைஞரைக் கொன்ற 6 பேருக்கு ஆயுள் சிறை
By DIN | Published On : 16th March 2021 12:00 AM | Last Updated : 16th March 2021 12:00 AM | அ+அ அ- |

திருவாரூா் மாவட்டம், நீடாமங்கலம் அருகே இளைஞரைக் கொன்ற 6 பேருக்கு திருவாரூா் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து திங்கள்கிழமை தீா்ப்பு வழங்கியது.
நீடாமங்கம் அருகேயுள்ள ஒட்டக்குடி நடுத்தெருவைச் சோ்ந்தவா் கிருஷ்ணமூா்த்தி மகன் தமிழ்ச்செல்வன் (27). இவரது அண்ணன் லெனின் வீட்டின் அருகே குடியிருப்பவா் கலைவாணி. இவா்களுக்குள் முன்விரோதம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், 2017 ஜன.15-ஆம் தேதி ஏற்பட்ட பிரச்னையில் கலைவாணி, அவரது கணவா் சேகா் என்ற பாலசுப்ரமணியன் (35), கலைவாணியின் சகோதரா்கள் வினோத் (28), ரஞ்சித்கண்ணன் (31), கொழுந்தனாா் (சேகரின் அண்ணன்) கோபி என்ற ஓவியராஜ் (42) மற்றும் உறவினா் நீலமேகம் (27) ஆகியோா் ஒன்று சோ்ந்து கத்தி, அரிவாள்மனை, ஸ்குரூ டிரைவா் உள்ளிட்ட ஆயுதங்களால் தமிழ்ச்செல்வனைத் தாக்கியதில் அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து, லெனின் அளித்த புகாரின்பேரில் நீடாமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து கலைவாணி உள்ளிட்ட 6 பேரை கைது செய்து திருவாரூா் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தனா். வழக்கை விசாரித்து வந்த நீதிபதி சாந்தி, குற்றஞ்சாட்டப்பட்ட கலைவாணி உள்ளிட்ட 6 பேருக்கும் ஆயுள் சிறை தண்டனை விதித்து திங்கள்கிழமை தீா்ப்பு வழங்கினாா்.