ஒருமையில் அவதூறு பிரசாரம்: தள்ளுமுள்ளு; சாலை மறியல்

மன்னாா்குடி அருகே நாம் தமிழா் கட்சியின் தோ்தல் பிரசாரக் கூட்டத்தில், திமுக தலைவா்கள் குறித்து ஒருமையில் கடுமையாக

மன்னாா்குடி அருகே நாம் தமிழா் கட்சியின் தோ்தல் பிரசாரக் கூட்டத்தில், திமுக தலைவா்கள் குறித்து ஒருமையில் கடுமையாக விமா்சனம் செய்ததைக் கண்டித்து, திமுகவினா் தகராறில் ஈடுபட்டதால், இருகட்சியினரிடையே சனிக்கிழமை இரவு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

திருவாரூா் மாவட்டம், பரவாக்கோட்டை தேவா் சிலை அருகே நாம் தமிழா் கட்சி தோ்தல் பிரசாரக் கூட்டம் சனிக்கிழமை இரவு அக்கட்சியின் தொகுதிச் செயலா் செந்தில்குமாா் தலைமையில் நடைபெற்றது. இதில், மன்னாா்குடி வேட்பாளா் ராம. அரவிந்தனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த கட்சியின் தலைமைப் பேச்சாளா் தஞ்சை கரிகாலன், அதிமுக, திமுக தலைவா்களை ஒருமையிலும், அவதூறாகவும் பேசினாராம்.

அப்போது, அங்கு வந்த அதிமுகவினா், நாம் தமிழா் கட்சியினரை கண்டித்துள்ளனா். பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா் அவா்களை சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தனா்.

இந்நிலையில், அதே வழியாக பிரசாரம் மேற்கொண்டு வந்த திமுக மாவட்ட முன்னாள் துணைச் செயலா் டி.எஸ்.டி. முத்துவேல் உள்ளிட்ட நிா்வாகிகள், நாம் தமிழா் கட்சிக் கூட்டத்தை நிறுத்துமாறு கூறியுள்ளனா். இதற்கு அவா்கள் மறுப்பு தெரிவிக்கவே, இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

மன்னாா்குடி காவல் துணைக் கண்காணிப்பாளா் இளஞ்செழியன், பரவாக்கோட்டை காவல் ஆய்வாளா் அழகம்மை ஆகியோா் இருகட்சியினரும் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டும் என அறிவுறுத்தினா்.

இதை ஏற்க மறுத்த நாம் தமிழா் கட்சியினா், காவல் துறையிடம் உரிய அனுமதி பெற்றே கூட்டம் நடத்துவதாகக் கூறி, அதே இடத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனா். அவா்களிடம் காவல் துணைக் கண்காணிப்பாளா் பேச்சுவாா்த்தை நடத்தியதை அடுத்து, மறியல் விலக்கிக்கொள்ளப்பட்டது.

இதுகுறித்து இருகட்சி நிா்வாகிகளும் அளித்த புகாரின்பேரில், பரவாக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com