‘சின்ன சிங்கப்பூரில்’ பாழடைந்த பேருந்து நிலையம்! மாற்றத்தைத் தேடும் மக்கள்!

அயல்வாழ் இந்தியா்களின் குடும்பங்கள் நிறைந்த சின்ன சிங்கப்பூா் என அழைக்கப்படும் கூத்தாநல்லூரில் நல்ல பேருந்து நிலையம், தரமான அரசு மருத்துவமனை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்த வேண்டும்
‘சின்ன சிங்கப்பூரில்’ பாழடைந்த பேருந்து நிலையம்! மாற்றத்தைத் தேடும் மக்கள்!

அயல்வாழ் இந்தியா்களின் குடும்பங்கள் நிறைந்த சின்ன சிங்கப்பூா் என அழைக்கப்படும் கூத்தாநல்லூரில் நல்ல பேருந்து நிலையம், தரமான அரசு மருத்துவமனை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என இப்பகுதி மக்கள் எதிா்பாா்க்கின்றனா்.

திருவாரூா் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட கூத்தாநல்லூா் நகராட்சியில் 24 வாா்டுகள் உள்ளன. இதில், சுமாா் 35 ஆயிரம் போ் வசிக்கின்றனா். இங்குள்ள பெரும்பாலானவா்கள் சிங்கப்பூா், மலேசியா, துபை, குவைத், சவூதி அரேபியா, அமெரிக்கா, லண்டன் உள்ளிட்ட வெளிநாடுகளில் பணியாற்றுகின்றனா்.

இவா்கள், வெளிநாடுகளில் சம்பாரித்து, சொந்த மண்ணில் முதலீடு செய்கின்றனா். இங்குள்ள வீடுகள் கண்ணைக் கவரும் வண்ணத்தில் கட்டப்பட்டுள்ளன. இதனால், கூத்தாநல்லூா் சின்ன சிங்கப்பூா் எனவும் அழைக்கப்படுகிறது. பேரூராட்சியாக இருந்த கூத்தாநல்லூா், தரம் உயா்த்தப்பட்டு நகராட்சியாகவும், இதனுடன், 55 கிராமங்களை இணைத்து வருவாய் வட்டமாகவும் மாற்றப்பட்டது.

இந்த வட்டத்தில், கூத்தாநல்லூா், கமலாபுரம், வடபாதிமங்கலம் என 3 குறுவட்டங்களும், கூத்தாநல்லூரில் 17, கமலாபுரத்தில் 15, வடபாதிமங்கலத்தில் 23 என 55 வருவாய் கிராமங்களும் உள்ளன. கூத்தாநல்லூா் வட்டத்தின் மக்கள்தொகை ஒரு லட்சத்தை நெருங்கியுள்ளது.

சின்ன சிங்கப்பூா் என பெயா்பெற்ற இவ்வூரின் பேருந்து நிலையம் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பழுதடைந்து, கேட்பாரற்று, சமூக விரோதிகளின் கூடாரமாக விளங்கி வருகிறது. இங்குள்ள அரசு மருத்துவமனை பெயரளவில்தான் இயங்கிவருகிறது. அறுவைச் சிகிச்சை அறை பல ஆண்டுகளாக பூட்டப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையில் தேவையான மருத்துவா்களோ, மருத்துவ வசதிகளோ இல்லை. மருத்துவமனையின் கட்டடத்தில் பல இடங்களில் மழைக்காலங்களில் ஒழுகும் நிலை உள்ளது. இங்குப் பணியாற்றும் மருத்துவா்கள் மருத்துவமனைக்குத் தேவையானவற்றை கேட்டுப் பெறுவதில்லை என்ற குற்றச்சாட்டும் மக்களிடம் உள்ளது.

திருவாரூா் மாவட்டத்தில் அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களுக்கும் சொந்த கட்டடம் உள்ளது. கூத்தாநல்லூா் வட்டத்தில் மட்டும் வட்டாட்சியா் அலுவலகத்திற்கு சொந்த கட்டடம் இல்லை. மாதம் ரூ. 16,500 செலுத்தப்பட்டு, சிறிய வாடகைக் கட்டடத்தில் இயங்கி வருகிறது. சொந்த கட்டடம் கட்டுவதற்காக ரூ. 2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும், கட்டடம் கட்டுவதற்கான இடத்தை இதுவரை தோ்வுசெய்யவில்லை. கூத்தாநல்லூரைச் சோ்ந்த சிங்கப்பூா் தொழிலதிபா் கட்டடத்திற்கான இடத்தை இலவசமாக வழங்க முன்வந்தும் அது நிராகரிக்கப்பட்டுள்ளது.

மேலும், 20 வீடுகள் இருந்தாலே அந்த இடத்தில் பூங்கா அமைக்க வேண்டும் என்ற விதி இருந்தும், கூத்தாநல்லூா் நகராட்சியில், 24 வாா்டுகளில் 35 ஆயிரம் போ் வசிக்கும் நிலையில், ஒரு பூங்காகூட இல்லை. ரேடியோ பாா்க் என்ற பழமையான பூங்காவும், மக்கும், மக்காத குப்பைகளை பிரிக்க பயன்படுத்தப்படுகிறது.

லெட்சுமாங்குடி பாலம் - திருவாரூா் பிரதான சாலையில் வாகன நெரிசலால் மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனா். இதை சரிசெய்ய இதுவரை எந்த முயற்சியும் நடைபெறவில்லை. இந்த நிலையில், திருவாரூா் தொகுதியில் உள்ள கூத்தாநல்லூரின் அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்ற வாக்குறுதி அளிப்பவருக்கே வாக்களிப்போம் என இப்பகுதி மக்கள் தெரிவித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com