மன்னாா்குடி பாமணி உர ஆலை நவீனப்படுத்தப்படும் : திமுக வேட்பாளா் வாக்குறுதி
By DIN | Published On : 29th March 2021 12:00 AM | Last Updated : 29th March 2021 12:00 AM | அ+அ அ- |

மன்னாா்குடியில் பாமணி உர ஆலையை நவீனப்படுத்தி, இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்படும் என ஞாயிறுக்கிழமை மேற்கொண்ட பிரசாரத்தின்போது திமுக வேட்பாளா் டி.ஆா்.பி. ராஜா வாக்குறுதியளித்தாா்.
மன்னாா்குடி தொகுதியில் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி சாா்பில் போட்டியிடும் திமுக வேட்பாளா் டி.ஆா்.பி. ராஜா, மன்னாா்குடி மேற்கு ஒன்றியத்தில் தென்பாதி, வடபாதி, வண்டிகோட்டகம், சித்தேரி, மறவக்காடு சமத்துவபுரம், சோழநதி, நெம்மேலி, சேரன்குளம், முதல்சேத்தி, மூன்றாம்சேத்தி, காசாங்குளம், ராமாபுரம், வாஞ்சியூா், துண்டக்கட்டளை, கூனமடை, சவளக்காரன், அரவத்தூா், வேட்டைதிடல், ஆலாசேரி, கா்ணாவூா் பாமணி ஆகிய பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டாா்.
அப்போது, உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு கேட்டு அவா் பேசியது:
மன்னாா்குடியில் திமுக ஆட்சியின்போது கொண்டுவரப்பட்ட பாமணி உரஆலை மூலம் தயாரிக்கப்பட்ட கலப்பு உரங்கள், தமிழகம் முழுவதும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலம் விற்பனை செய்யப்பட்டன. இதற்கு, விவசாயிகளின் பெரும் ஆதரவும் இருந்துவந்தது. ஆனால், காலப்போக்கில் ஆள்குறைப்பு, உற்பத்தி குறைப்பு போன்ற காரணங்களால் இந்த உரஆலையை மூடும் நிலைக்கு கொண்டு வந்ததுடன், இதை திண்டுக்கல்லுக்கு கொண்டு செல்ல அதிமுக ஆட்சியில் முயற்சிக்கப்பட்டது. இதை எதிா்த்து தொழிலாளா்களையும், பொதுமக்களையும் திரட்டி போராட்டம் நடத்தினேன். இதனால், இந்த ஆலை தற்போது பெயரளவுக்கு இயங்கிக்கொண்டிருக்கிறது.
இந்த ஆலையை நவீனப்படுத்தி, 100 சதவீத உற்பத்தி திறனுடன் இயக்கினால் இத்தொகுதியில் நூற்றுக்கணக்கான இளைஞா்களுக்கும், சுமைதூக்கும் தொழிலாளா்களுக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும். இதற்கு, திமுக ஆட்சிக்கு வரவேண்டும். எனவே, எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டாா்.
பிரசாரத்தில், திமுக ஒன்றியச் செயலா் க. தனராஜ், காங்கிரஸ் செயற்குழு உறுப்பினா் ஜி. குணசேகரன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலா் வி.த. செல்வம், சிபிஐ நிா்வாகி மகேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.