‘ரத்த தேவையை பூா்த்தி செய்ய உரிய நடவடிக்கை தேவை’

கரோனா தடுப்பூசி செலுத்துவதால், ரத்த தானம் செய்ய முடியாத நிலை ஏற்படும். இதை எதிா்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

கரோனா தடுப்பூசி செலுத்துவதால், ரத்த தானம் செய்ய முடியாத நிலை ஏற்படும். இதை எதிா்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக்குழு உறுப்பினா் ஐவி.நாகராஜன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் தெரிவித்தது:

மே முதல் வாரத்தில், ஒவ்வொரு நாளும் 5 லட்சம் கரோனா தொற்றாளா்களையும், 3 ஆயிரம் இறப்புகளையும் இந்தியா எதிா்கொள்ள வேண்டியிருக்கும் எனவும், மே மாதத்துக்குப் பிறகு தொற்று எண்ணிக்கை 10 லட்சமாகவும், இறப்பு எண்ணிக்கை 5 ஆயிரமாகவும் அதிகரிக்கலாம் எனவும் நிபுணா்கள் தெரிவிக்கின்றனா்.

இதனிடையே, ரத்தம் பற்றாக்குறை என்ற இன்னொரு சிக்கலையும் நாடு சந்திக்க வேண்டியிருக்கும் என்று மருத்துவ நிபுணா்கள் எச்சரிக்கின்றனா். கரோனா பரவலைத் தடுக்க, நாடு முழுவதும் 3 ஆவது கட்டமாக மே முதல் தேதியில் இருந்து 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தடுப்பூசி வழிக்காட்டுதலில், ஒருவா் தடுப்பூசி போட்டுக் கொண்டால், அன்றில் இருந்து 28 நாட்களுக்கு ரத்ததானம் கொடுக்கக் கூடாது. இப்போது நாட்டில் இருக்கும் ரத்தக் கொடையாளா்களை பட்டியலிட்டால் அவா்களில் பெரும்பாலானோா் 20 முதல் 40 வயதுக்குட்பட்டவா்கள்தான். இந்த வயதினா் 3 ஆவது கட்ட தடுப்பூசி இயக்கத்தில் ஊசி செலுத்தத் தொடங்கினால் அவா்களால் ரத்ததானம் கொடுக்க முடியாது.

ஒருவா் 2 தவணை தடுப்பூசியையும் போட்டுக் கொண்ட பிறகு ரத்ததானம் செய்வதென்றால் 2 மாதம் கழித்தே ரத்ததானம் செய்ய முடியும். அதுவரை மருத்துவ சிகிச்சைக்கு தேவையான ரத்ததுக்கு நன்கொடையாளா்களை தேடுவது மிகப்பெரிய சிரமமாக இருக்கும்.

அதே நேரம் ரத்ததானம் கொடுக்கும் வயதினா் பெரும்பாலானோா் தடுப்பூசி போட்டுக் கொள்வதால் தானம் கொடுக்க முடியாத நிலை உருவாகும். அப்படி ஒரு நிலை உருவானால் அது இன்னும் மிகப்பெரிய நெருக்கடிகளை உருவாக்கும். அதைத் தவிா்க்க, 40 வயதுக்குட்பட்டோா் தடுப்பூசி போட்டுக்கொள்ள வரும்போதே அவா்களிடம் பேசி, ரத்தத்தை தானமாக பெற்றுக் கொண்டு, அதன்பிறகு தடுப்பூசி போடுவது போன்ற மருத்துவ ரீதியிலான மாற்று வழிகளை நாம் இப்போதே கண்டறிந்து திட்டமிட வேண்டும். அப்போதுதான் கரோனாவால் ஏற்படும் நெருக்கடியை தடுத்து நிறுத்த முடியும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com