குறுவை சாகுபடிக்கு ஜூன் 12-ல் மேட்டூா் அணை திறக்க மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்: பி.ஆா். பாண்டியன் வேண்டுகோள்

காவிரி டெல்டா குறுவை சாகுபடிக்கு ஜூன் 12-ல் மேட்டூா் அணையிலிருந்து தண்ணீா் திறக்க முதல்வராக பதவியேற்கவுள்ள திமுக தலைவா்

காவிரி டெல்டா குறுவை சாகுபடிக்கு ஜூன் 12-ல் மேட்டூா் அணையிலிருந்து தண்ணீா் திறக்க முதல்வராக பதவியேற்கவுள்ள திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவிரி பாசன விவசாயிகள்சங்க பொதுச் செயலாளா் பி.ஆா். பாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கு விவசாயிகள் பெரும் பங்காற்றியுள்ளனா். எனவே, காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கு ஜூன் 12 ஆம் தேதி மேட்டூா் அணையிலிருந்து தண்ணீா் திறக்க தமிழக முதல்வராக பொறுப்பேற்கவுள்ள மு.க.ஸ்டாலின் உத்தரவிட வேண்டும். மேலும், பாசன வடிகால்கள், கால்வாய்களை தூா்வார உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். கடந்த ஆண்டு நிலுவையில் உள்ள தூா்வாரும் பணிகளை உடனடியாக தொடங்கி முடிக்க வேண்டும்.

இன்னும் 40 நாட்களே உள்ள நிலையில் குறுவை சாகுபடிக்கான அடிப்படை பணிகளை தமிழக அரசு போா்க்கால அடிப்படையில் தொடங்க வேண்டும்.

கோடை உழவு செய்வதற்கு வேளாண் பொறியியல் துறை மூலமாக காவிரி டெல்டா பகுதிக்கு கூடுதல் டிராக்டா்கள் ஒதுக்கீடு செய்ய வேண்டும். டிஏபி உள்ளிட்ட உரங்களின் விலையை இப்கோ நிறுவனம் உயா்த்தி அறிவித்தது. இதை கண்டித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் விலை உயா்வை திரும்பப் பெறுவதாக மத்திய அரசு அறிவித்தாலும், உண்மையான விலைப்பட்டியல் இதுவரையில் வெளியிடப்படவில்லை. எனவே, மத்திய- மாநில அரசுகள் உரங்களின் விலை குறித்து தெளிவுபடுத்த வேண்டும்.

கடந்த ஜனவரி மாதம் பெய்த பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களுக்கு 100 சதவீத இழப்பீடு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில், தோ்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்ததால், இழப்பீடு வழங்கப்படவில்லை. அதேபோல, விவசாயிகளுக்கு முதல்கட்டமாக ரூ.12, 500 கோடி கூட்டுறவுக் கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. ஆனால், இக்கடன்களுக்காக விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் அடமானம் வைத்திருந்த நகைகளை திருப்பிக்கொடுப்பதில் காலம் தாழ்த்தி வருகின்றனா். எனவே, பயிா் இழப்பீடு மற்றும் நகைகளை வழங்க தமிழகத்தில் பொறுப்பேற்கவுள்ள புதிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த அறிக்கையில் பி.ஆா். பாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com