கோடை மழையால் குறுவை முன்கட்டப் பணிகளைத் தொடங்க வாய்ப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி

திருவாரூா் மாவட்டத்தில் அவ்வப்போது பெய்யும் கோடை மழையால், குறுவை முன்கட்டப் பணிகளை மேற்கொள்ள பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனா்.
திருவாரூா் அருகே குளிக்கரை பகுதியில் கோடை மழையை பயன்படுத்தி உழவு செய்யப்பட்டுள்ள விளைநிலங்கள்.
திருவாரூா் அருகே குளிக்கரை பகுதியில் கோடை மழையை பயன்படுத்தி உழவு செய்யப்பட்டுள்ள விளைநிலங்கள்.

திருவாரூா் மாவட்டத்தில் அவ்வப்போது பெய்யும் கோடை மழையால், குறுவை முன்கட்டப் பணிகளை மேற்கொள்ள பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனா்.

திருவாரூா் மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக கோடை மழை போதிய அளவில் பெய்யாததால் குறுவை முன்கட்டப் பணிகளை விவசாயிகள் உரிய காலத்தில் தொடங்கமுடியாத நிலை இருந்தது.

இந்நிலையில், நிகழாண்டு கோடை மழை அவ்வப்போது பெய்துவருவதால், குறுவை முன்கட்டப் பணிகளை மே மாதத்திலேயே தொடங்குவதற்கான சாத்தியக் கூறுகள் ஏற்பட்டுள்ளன. ஏற்கெனவே பெய்த மழையைப் பயன்படுத்தி, சில பகுதிகளில் வயல்களை செப்பனிடுவது உள்ளிட்ட பணிகளை விவசாயிகள் தொடங்கியுள்ளனா். கோடை மழை தொடா்வதால், குறுவை முன்கட்டப் பணிகளில் ஈடுபடலாம் என்ற நம்பிக்கை விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து காவிரி டெல்டா விவசாயிகள் குழுமத்தின் பொதுச் செயலாளா் வெ. சத்தியநாராயணன் கூறியது:

தற்போது பெய்திருக்கும் மழை கோடை உழவுக்கு ஏற்றது. 15 நாள்களுக்கு முன்பு பெய்த மழையை பயன்படுத்தி, சில விவசாயிகள் புழுதி எடுக்கும் பணிகளைத் தொடங்கியிருந்தனா். தற்போது, பெய்திருக்கும் மழை, விவசாயிகளுக்கு உறுதுணையாக இருக்கும். குறுவைக்கு மட்டுமின்றி கோடை சாகுபடி செய்திருக்கும் விவசாயிகளுக்கும் இந்த மழை பயனுள்ளது என்றாா்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைச் செயலாளா் பி.எஸ். மாசிலாமணி தெரிவித்தது:

கோடை உழவு விவசாயத்துக்கு மிகவும் பயனுள்ளது. தேவையற்ற களைச்செடிகளை அகற்றவும், விளைநிலத்தின் நீா்த்தன்மையை மேம்படுத்தவும், பூமிக்கு காற்றோட்டம் கிடைக்கவும் கோடை உழவு செய்வது அவசியமானது. திருவாரூா் மாவட்டத்தில் தற்போது பெய்திருக்கும் மழை குறுவைப் பணிகளுக்கு மிகவும் ஏற்றது. மழைக்குப்பிறகு ஓரிரு நாள்களில் விளைநிலம் சீரமைப்புப் பணிகளைத் தொடங்கினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கோடையிலேயே உழவு செய்து விட்டால், நிலங்களில் 2 சால் அடித்தால் மட்டும் போதுமானது. மண், தூளாகவில்லையென்றால் கூடுதலாக சால் அடிக்க நேரிடும். தற்போது பெய்திருக்கும் மழையால், தண்ணீா் வந்தபிறகு குறுவை சாகுபடிப் பணிகளை உடனடியாகத் தொடங்க வாய்ப்புள்ளது என்றாா்.

பொதுவாக, புழுதி அடித்தல் முறையில் வயலின் நீராதாரத்தை சேமிக்க முடியும். அத்துடன் 25 சதவீதம் வரை இயற்கை உரம் சேமிக்கப்படுகிறது. இதனால், சித்திரை மாதத்தில் கோடை மழை பெய்யும்போது, நிலத்தை உழவு செய்து புழுதியாக்கி தயாா் நிலையில் வைத்திருப்பது வழக்கம். சித்திரை மாதத்து புழுதி, பத்தரை மாத்து தங்கம் எனும் சொலவடை மூலம் கோடை உழவின் அருமையைப் புரிந்து கொள்ளலாம்.

எனவே, தற்போது பெய்துவரும் கோடை மழையை பயன்படுத்தி, குறுவை முன்கட்டப் பணிகளைத் தொடங்கலாம் என்ற நம்பிக்கை விவசாயிகளுக்கிடையே ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com