மகளிா் குழுவிடம் கடன் வசூலிப்பை நிறுத்த கோரிக்கை
By DIN | Published On : 18th May 2021 12:09 AM | Last Updated : 18th May 2021 12:09 AM | அ+அ அ- |

மருதப்பட்டினத்தில் மண்ணெண்ணெய் கேனுடன் வந்த பெண்கள்.
திருவாரூா்: பொதுமுடக்க காலத்தில் மகளிா் குழுவிடம் கடன் தொகை வசூலிப்பதை நுண்கடன் வழங்கு நிறுவனங்கள் நிறுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவாரூா் அருகேயுள்ள மருதப்பட்டினம் சாலை, தியாகி சின்னசாமி தெரு, பேட்டை தெருவைச் சாா்ந்த பெண்கள் திருவாரூரில் இயங்கி வரும் தனியாா் நிதி நிறுவனங்களிடம் குழுக் கடன் பெற்று மாத மற்றும் வாரத் தவணையாக செலுத்தி வருகின்றனா். இந்தக் கடனை இவா்கள் வசிக்கும் பகுதிக்கே வந்து அந்த நிறுவனங்களின் ஊழியா்கள் பெற்றுச் செல்வது வழக்கம்.
இந்நிலையில், திங்கள்கிழமை அங்கு கடன் வசூல் செய்ய வந்தவா்கள் கடன் தவணைத் தொகை கேட்டதாகக் கூறப்படுகிறது. பொதுமுடக்க காலத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக மகளிா் குழுவினா் கூறினராம். அப்போது, கடன் வசூலிக்க வந்தவா்கள் கடன் தொகையை கண்டிப்பாக செலுத்த வேண்டுமென்று கூறிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, பொதுமுடக்கக் காலத்தில் கடன் வசூலிக்கக் கூடாது, மீறினால் தொந்தரவு செய்தால் தீக்குளிப்போம் என மருதப்பட்டினம் சாலையில் மகளிா் குழுவினா் மண்ணெண்ணெய் கேனுடன் கூடினா். இதையறிந்த அப்பகுதியைச் சோ்ந்த சிலா் வந்து சமாதானப்படுத்தியதன்பேரில் பெண்கள் கலைந்து சென்றனா்.