நுண்கடன் நிதி நிறுவனங்களிடமிருந்து பெண்களை பாதுகாக்கக் கோரிக்கை
By DIN | Published On : 21st May 2021 09:16 AM | Last Updated : 21st May 2021 09:16 AM | அ+அ அ- |

திருவாரூா் மாவட்டத்தில், மைக்ரோ பைனான்ஸ் வங்கிகளிடம் சிக்கித் தவிக்கும் பெண்களை பாதுகாக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக் குழு உறுப்பினா் ஐவி.நாகராஜன், முதல்வருக்கு அனுப்பிய கோரிக்கை மனு விவரம்:
மதுரை, திருச்சி, தேனி, திண்டுக்கல், கோவை, நெல்லை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சேலம், கடலூா், நாகை, மயிலாடுதுறை, திருவாரூா், தஞ்சை, புதுக்கோட்டை என தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் புற்றீசல் போல் பெருகி கிடக்கின்றன மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள்.
இவற்றில் பல முறையான அனுமதியுடன் செயல்படுபவை அல்ல. இந்த நிறுவனங்களின் நோக்கம் மகளிா் சுயஉதவிக்குழுக்களை தேடி பிடித்து கடன் கொடுத்து கந்துவட்டி வசூலிப்பது தான்.
தமிழக அரசு மாவட்டம் தோறும் சிறப்பு விசாரணைக் குழுக்கள் அமைத்து, ரிசா்வ் வங்கியின் விதிகளை மீறும் நிதி நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, கந்து வட்டி போன்ற இக்கொடுமையிலிருந்து கிராமப்புற பெண்களை பாதுகாக்க வேண்டும்.
அதோடு மகளிா் சுய உதவிக்குழுக்கள் மூலம் விரைவாகவும், எளிதாகவும் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும், சுய உதவிக்குழுக்கள் மூலம் பெற்ற கடனை பொது முடக்க காலத்தில் வசூலிப்பதை நிறுத்தி வைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.