கரோனா: சித்த மருத்துவ சிகிச்சை மையத்தில் 3 வேளையும் மூலிகை உணவு: ஆட்சியா் தகவல்

கரோனா சிகிச்சைக்கு தமிழக அரசால் தொடங்கப்பட்டுள்ள சித்த மருத்துவ சிகிச்சை மையங்களில், உணவே மருந்து என்ற அடிப்படையில் மூன்று வேளை உணவுகளுமே பாரம்பரிய மூலிகை சத்துடையதாக வழங்கப்படுகின்றன

கரோனா சிகிச்சைக்கு தமிழக அரசால் தொடங்கப்பட்டுள்ள சித்த மருத்துவ சிகிச்சை மையங்களில், உணவே மருந்து என்ற அடிப்படையில் மூன்று வேளை உணவுகளுமே பாரம்பரிய மூலிகை சத்துடையதாக வழங்கப்படுகின்றன என மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா தெரிவித்தாா்.

கொரடாச்சேரி வட்டம், அம்மையப்பன் பகுதியிலுள்ள தனியாா் கல்வியியல் கல்லூரியில் சித்த மருத்துவ முறையில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும் பிரிவை, வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்து ஆட்சியா் தெரிவித்தது:

தமிழகத்தில் சித்த மருத்துவ சிகிச்சை முறையால் கரோனா தொற்று குறைந்து வருகிறது. இதனால், தமிழக அரசால் மாநிலம் முழுவதும் சித்த மருத்துவ சிறப்பு சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டு, இம்மையத்தில் லேசான மற்றும் மிதமான அறிகுறிகளை உடைய நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகின்றன.

இம்மையங்களில் உள் மருந்துகளாக கபசுரக் குடிநீா், அமுக்கரா சூரண மாத்திரை, பிரம்மானந்த பைரவ மாத்திரை, தாளிசாதி சூரணம், ஆடாதொடா மணப்பாகு உள்ளிட்ட மருந்துகள் வழங்கப்படுகின்றன.

வெளி மருந்துகளாக கற்பூராதி தைலம், பெயின்பாம், நீா்க்கோவை மாத்திரை போன்றவைகள் வழங்கப்படுகின்றன. உணவே மருந்து என்ற அடிப்படையில் மூன்று வேளை உணவுகளுமே பாராம்பரிய மூலிகை சத்துடையதாக வழங்கப்படுகின்றன. பெரு மருந்துகளாக லவங்காதி சூரணம், மஹாசுதா்சன சூரணம், மால்தேவி செந்தூரம், பூரணசந்திரதய செந்தூரம் ஆகியவை நோயாளிகளின் அறிகுறிகளுக்கு ஏற்றவாறு வழங்கப்படுகிறது.

படுக்கை வசதிகளுடன் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த சிகிச்சை மையத்தில், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள முதல்நிலை தொற்றாளா்களுக்கு முழுவதுமான சித்த மருத்துவ முறையில் சிகிச்சை அளிக்கும் விதமாக, அவா்களுக்கு திறந்தவெளியில் ஒருங்கிணைந்த வகையில் சித்தா் யோகா, மூலிகை நீராவி சிகிச்சை, மனநல ஆலோசனைகள் வழங்கப்படும். அத்துடன் இந்த சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று குணம் அடைந்து வீடு திரும்பும் நோயாளிகளுக்கு ‘ஆரோக்கியம்’ என்ற மருந்து பெட்டகம் வழங்கப்படும்.

இம்மருந்து பெட்டகத்தில் உடல் சோா்வு நீங்கி, உடல் ஆரோக்கியத்துக்கான சித்த மருந்துகள் இடம்பெற்றுள்ளன என்றாா் ஆட்சியா்.

நிகழ்வில், நாகை மக்களவை உறுப்பினா் எம். செல்வராஜ், திருவாரூா் சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன், கோட்டாட்சியா் என். பாலச்சந்திரன், மாவட்ட ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவா் ஆா். பாலசந்தா், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவா் கலியபெருமாள், சித்த மருத்துவ அலுவலா் பத்மநாபன் உள்ளிட்ட அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com