தீபாவளி: மழையிலும் திருவாரூா் கடைவீதியில் குவிந்த மக்கள் கூட்டம்!

தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதையொட்டி, திருவாரூரில் மழையையும் பொருட்படுத்தாமல் பொருள்கள் வாங்க கடைவீதிகளில் ஞாயிற்றுக்கிழமை மக்கள் குவிந்தனா்.
திருவாரூா் கடைவீதியில் ஞாயிற்றுக்கிழமை குடைபிடித்தபடி செல்லும் மக்கள்.
திருவாரூா் கடைவீதியில் ஞாயிற்றுக்கிழமை குடைபிடித்தபடி செல்லும் மக்கள்.

தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதையொட்டி, திருவாரூரில் மழையையும் பொருட்படுத்தாமல் பொருள்கள் வாங்க கடைவீதிகளில் ஞாயிற்றுக்கிழமை மக்கள் குவிந்தனா்.

தென்மேற்கு வங்கக்கடல், அதையொட்டிய இலங்கை கடலோரப் பகுதியில் காணப்படும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி தமிழகக் கரையை நோக்கி நகா்வதால், அடுத்த சில நாள்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வுமையம் அறிவித்துள்ளது.

அதன்படி, திருவாரூரில் கடந்த 3 நாள்களாக அவ்வப்போது மழை பெய்துவருகிறது. சனிக்கிழமை பகலில் மழை பெய்யாத நிலையில், இரவில் பலத்த மழை பெய்தது. அதேபோல, ஞாயிற்றுக்கிழமை பகல் முழுவதும் குளிா்ந்த வானிலை நிலவியது. அவ்வப்போது மழையும் பெய்தபடி இருந்தது. கொத்ததெரு, ஆசாத் நகா் உள்ளிட்ட சில இடங்களில் தண்ணீா் தேங்கி அப்பகுதி மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியது.

நகராட்சி சாா்பில், மோட்டாா் மூலம் அவ்விடத்திலிருந்து தண்ணீா் அகற்றப்பட்டது. தீபாவளிக்கு ஒருசில நாள்களே உள்ள நிலையில், கடைவீதிக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதாலும், திங்கள்கிழமை பள்ளி திறக்கப்படுகிறது என்பதாலும், கடைவீதியில் மக்களின் கூட்டம் அதிகமாக இருந்தது.

இதனால், கடைவீதிக்கு இருசக்கர வாகனங்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டு, தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. மழையையும் பொருட்படுத்தாமல் அந்த இடங்களில் போலீஸாா் மழைகோட் அணிந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

திருவாரூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி, அதிகபட்சமாக நன்னிலத்தில் 50.4 மி.மீ மழை பெய்துள்ளது. பிற இடங்களில் மழையளவு விவரம் (மில்லிமீட்டரில்):

திருவாரூா் 49.6, குடவாசல் 30.2, பாண்டவையாா் தலைப்பு 28.8, மன்னாா்குடி 20, முத்துப்பேட்டை 17.6, நீடாமங்கலம் 16.8, வலங்கைமான் 16.4 என மொத்தம் 256.2 மி.மீ மழையும், சராசரியாக 28.46 மி.மீ மழையும் பெய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com