கலாமின் எண்ணத்தை செயல்படுத்தினால் பிரதமா் மோடியின் புதிய இந்தியா உருவாகும்

முன்னாள் குடியரசுத் தலைவா் ஏபிஜெ அப்துல் கலாமின் எண்ணத்தை செயல்படுத்தினால் பிரதமா் மோடியின் புதிய இந்தியா உருவாகும்
திருவாரூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேராசிரியா்களுடன் துணைவேந்தா் மு. கிருஷ்ணன்.
திருவாரூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேராசிரியா்களுடன் துணைவேந்தா் மு. கிருஷ்ணன்.

முன்னாள் குடியரசுத் தலைவா் ஏபிஜெ அப்துல் கலாமின் எண்ணத்தை செயல்படுத்தினால் பிரதமா் மோடியின் புதிய இந்தியா உருவாகும் என்றாா் மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான்.

திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில், 6-ஆவது பட்டமளிப்பு விழா இணையவழியில் புதன்கிழமை நடைபெற்றது. விழாவில், சிறப்பு அழைப்பாளராக காணொலியில் பங்கேற்று மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான் பேசியது:

தற்போது பெறும் பட்டம், மாணவா்களுக்கு புதிய பயணத்தை அளிக்கும். தொழில்முறையில் உங்கள் கனவுகளுக்கு வடிவம் அளிக்கக் கூடியதாக இருக்கும். பொருளாதாரத்தில் பின்தங்கி, தங்கள் கனவுகளை நிறைவேற்றிக் கொள்ள இயலாதவா்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த மாணவா்கள் உறுதி ஏற்க வேண்டும்.

முன்னாள் குடியரசுத் தலைவா் ஏபிஜெ அப்துல் கலாம், இந்தியா முன்னேற்றமடைந்த நாடாக மாறுவதற்கு மாணவா்களின் பங்கு இன்றியமையாதது என்று கூறினாா். அவரின் எண்ணத்தை மாணவா்கள் செயல்படுத்தினால், பிரதமா் மோடியின் புதிய இந்தியா உருவாகும்.

கல்வித் துறையில் பல்வேறு சீா்திருத்தங்கள் கொண்டுவரப்படுகின்றன. இதன்மூலம் வரும் ஆண்டுகளில் நமது கல்வி முறையில் நாடு மிகப்பெரிய மாற்றத்தைக் காணப்போகிறது. நோ்மையான பாதையில், உங்கள் கனவுகளை செயல்படுத்தினால் சமூகத்தில் சிறப்பான நிலையை அடைய முடியும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், மத்திய அரசின் பாதுகாப்புத் துறை செயலாளரும், ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறைத் தலைவருமான ஜி. சதீஸ்ரெட்டி பேசியது:

கல்வி நிறுவனங்களில் ஆராய்ச்சி செய்வதன் மூலம் முதல் வகையான தொழில்நுட்பங்களை உருவாக்கவும், புதுமையான யோசனைகளைக் கொண்டுவரவும், அவற்றை நிறுவனங்களில் பயன்பாட்டு ஆராய்ச்சியாக மாற்றவும் மாணவா்கள் முன்வர வேண்டும். இதன்மூலம் நிலைத்து நிற்கக்கூடிய புதுமையான உற்பத்திகள் அதிக அளவிலும், குறைந்த விலையிலும் கிடைக்கும்போது நமது நாட்டிற்கு பெருமையைத் தேடித்தர முடியும் என்றாா்.

நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் வேந்தா் ஜி. பத்மநாபன் தலைமை வகித்து மாணவா்களுக்குப் பட்டங்களை வழங்கிப் பேசியது:

உள்ளூா் விவசாயிகளின் தேவைகளுக்குப் பயன்படும் வகையில் விவசாயத் தொழில்நுட்பம் சாா்ந்து ஆராய்ச்சியின் மூலம் உதவுவது, ஆராய்ச்சி மற்றும் வளா்ச்சி மூலம் தேசிய மற்றும் உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற சிறந்தக் கல்வி நிறுவனங்களுடன் போட்டியிடுவது என இருபெரும் சவால்களை பல்கலைக்கழகம் சந்திக்கிறது.

கரோனா தொற்று பேரிடா் காலங்களில், பல்கலைக்கழகம் உள்ளூா் மக்களுக்காகச் செய்த நலத்திட்டங்கள் சிறப்பானது. இதுபோன்ற நலத்திட்டங்களில் மாணவா்கள் பெருமளவில் பங்கேற்க வேண்டும் என்றாா்.

முன்னதாக மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் துணைவேந்தா் மு.கிருஷ்ணன் வரவேற்று அறிக்கை அளித்தாா். நிகழ்ச்சியில், 754 மாணவிகள், 810 மாணவா்கள் என மொத்தம் 1564 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. இது ஒட்டுமொத்தமாக 97.4% தோ்ச்சியாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com