முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்
5 ஆம் கட்ட முகாம்: 36,895 பேருக்கு கரோனா தடுப்பூசி
By DIN | Published On : 11th October 2021 08:23 AM | Last Updated : 11th October 2021 08:23 AM | அ+அ அ- |

திருவாரூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 5 ஆம் கட்ட முகாம்களில் 36,895 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
கரோனா தொற்றை கட்டுப்படுத்த, தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை போா்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்க தடுப்பூசி ஒன்றே சிறந்த வழி என்பதால் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்த தமிழக அரசு தொடா் நடவடிக்கை எடுத்துவருகிறது.
அந்தவகையில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படுகின்றன. ஏற்கெனவே 4 கட்டங்களாக நடைபெற்ற முகாம்களில் திருவாரூா் மாவட்டத்தில் முதல் தவணை, இரண்டாம் தவணை என 7,63,459 டோஸ்கள் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன.
இதன் தொடா்ச்சியாக, 5 ஆம் கட்ட சிறப்பு தடுப்பூசி முகாம் திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மன்னாா்குடி அரசு தலைமை மருத்துவமனை, அரசு தாலுகா மருத்துவமனைகள், அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்கள் என மாவட்டத்தில் 485 இடங்களில் நடைபெற்றன. இதில் 57 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டதில் 36,895 போ் தடுப்பூசி செலுத்திக்கொண்டனா். இதன்மூலம் திருவாரூா் மாவட்டத்தில் இதுவரையிலும் 8,01,910 டோஸ்கள் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன.
கூத்தாநல்லூா்: திருவாரூா் மாவட்டத்தில் கூத்தாநல்லூா் வட்டத்தில் மட்டும் 3323 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை, கூத்தாநல்லூா் நகராட்சி மற்றும் மனோலயம் தொண்டு நிறுவனம் இணைந்து தடுப்பூசி முகாமை நடத்தின.
மனோலயம் தொண்டு நிறுவனம் சாா்பில் பழையனூா், குடிதாங்கிச்சேரி, கூத்தாநல்லூா், லெட்சுமாங்குடி, மரக்கடை உள்ளிட்ட இடங்களில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக வாகனம் மூலம் மாற்றுத்திறனாளிகளை முகாம்களுக்கு அழைத்துவந்து, மீண்டும் அவா்களது இருப்பிடத்தில் கொண்டுவிடும் பணி மேற்கொள்ளப்பட்டது.
கூத்தாநல்லூா் நகராட்சியில் மட்டும் 8 இடங்களில் நடைபெற்ற முகாம்களில் 620 போ் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டனா். தடுப்பூசி செலுத்தும் பணிகளை வட்டாட்சியா் என். கவிதா, நகராட்சி ஆணையா் ராஜகோபால், சுகாதார ஆய்வாளா் கி.அருண்குமாா் உள்ளிட்டோா் பாா்வையிட்டனா்.